பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 51

பட்டவராய், பின்புறம் கட்டிய கைகளை முன்புறம் கொண்டு வந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைத்துக் குத்திக் கொண்டார். அவர் தயவில் வாழும் ஒருத்தி தயவுக்குப் பிரதியாகக் கேட்டதைக் கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. இப்படி ஒரு காலிப் பயலடம் சொன்னாள் என்றால்... ஒருவேளை அவனுக்கும் அவளுக்கும்.... அக்கா என்கிறானே... அக்கா சமாச்சாரங்கள் பலதை பார்த்திருக்கிறோமே... அப்படியானால்... இவனைவிட நான் எந்த வகையில் மட்டம்?

அதிகாரத்தை ஆண்மையாகவும், அந்த அதிகாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலோ அல்லது பயப்படும் முறையிலோ நிமிர்ந்து நோக்காது, பயபக்தியுடன் பார்க்கும் பெண்களை காதல் பார்வையாகக் கருதிப் பழக்கப்பட்ட அந்த மனிதர், பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்ற அந்த வீர புருஷர், நல்ல பதவிக்கு வந்த பிறகு முதல் தடவையாகத் தோல்வியுற்றவர் போல் வாணி இருந்த இருக்கையை ஆத்திரமாகப் பார்த்தார்.

நேற்று 'கான்பிடன்ஷியல்' என்று சொல்லி, அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுத்த ஃபைல் - காட்ரெஜ் பீரோவில் - அந்த பீரோவுக்குள்ளேயும் அதற்குள் இருக்கும் டிராவுக்குள் இருக்க வேண்டிய அந்த டெண்டர் ஃபைல், அவள் நாற்காலி மீது பக்கங்களைப் பரப்பி, மின் விசிறிக் காற்றில் சிறகடித்துப் பறக்கும் பறவைபோல் விரிந்து கிடப்பதைப் பார்த்ததும் அதை எடுத்துக் கொண்டார். எதற்கும் உதவும் என்பதுபோல், அதை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அறைக்குள் போனார்.

அவர் எந்த முடிவுக்கும் வரவில்லை. முதலில் கவனிக்கப்பட வேண்டியது மெய்யப்பனா அல்லது வாணியா...?