பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

உடம்பு முழுவதும் ஏதோ ஒருவித ஆவேசம் ஆக்கிரமிக்க, அந்த ஆவேசச் சூட்டில் விமலாவின் துரோகம் வெடித்துப் பொடிப் பொடியாகி, போன இடம் போனது தெரியாமல் போக, மெய்யப்பன் விறைத்த பார்வையுடன், அஞ்சுவதற்கும் அஞ்ச விரும்பாதவன்போல, நாளைக்கு நடக்கப் போவதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூடத் தோன்றாத சுயநம்பிக்கை கொண்டவன்போல, இருப்பிடம் வந்தான். வீட்டைத் திறப்பதற்காக பேண்ட் பைக்குள் கைவிட்டான். சாவிக் கொத்தைக் காணவில்லை. எங்கே விட்டோம் என்று நினைவில்லை. மானேஜருடன் நடந்த ரகளையில, அங்கேயே விட்டிருக்கலாம். இனிமேல் போகமுடியாது. அலுவலகம் மூடப்பட்டிருக்கலாம்.

எப்படிக் கதவைத் திறப்பது என்று மோவாயை வலது கையால் திருவியபடி அவன் யோசித்துக் கொண்டிருந்த போது, உள்போர்ஷனில் இருந்து, நேற்றிரவு அண்ணனிடம் அடிபட்ட அந்தப் பெண் - சத்யா வெளியே வந்தாள். வலதுகால் இளமையில் ஏற்பட்ட வாதத்தால் கூம்பிப் போயிருந்தது. அதைப் பிடித்துக்கொண்டே நடப்பது, அந்த காலே அவளுக்கு ஊன்றுகோலாகவும் இருப்பதுபோல் தோன்றும். கழுத்தில் நூல் பிரிந்த ஒரு மஞ்சள் சரடு. வள்ளிக்கிழங்குச் செடியின் காம்பு மாதியான செஞ்சிவப்பு நிறம். குழப்பமாகி குழப்பமாகி, நீர் கலங்கிய குட்டையாய்ப் போனதுபோன்ற கண்கள். யாராவது எதையாவது கேட்டால், கேட்பவர் தன்னைத் தாக்க வருவதுபோல் மார்பைப் பின்பக்கமாய் இழுத்து, கண்களை அகல வைத்து, திகிலோடு பார்ப்பவள். எவனோ ஒருவன் அவளைக் கல்யாணம் செய்துவிட்டு, ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அவள் கால் ஊனம் என்பதைக் கண்டவன் போல், அவளுக்கு ஒரே ஆதரவான அண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைத்து