பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

53


விட்டான். அண்ணன் மனைவி, அவள் கையில், காதில் போட்டிருந்ததையெல்லாம் விற்கும் வரை 'கண்ணே மூக்கே' என்று சொல்லிவிட்டு, இப்போது கண்ணிலும் மூக்கிலும் குத்துக்கள் விழும்படி நடத்துவதை மெய்யப்பன் பார்த்திருக்கிறான். ஓரிரு தடவை இந்தப் பெண்ணுக்காக அவன் பரிதாபப்பட்டிருந்தாலும், விமலாவின் புனிதக் காதலில் மூழ்கியிருந்த அவனுக்கு, அவள் கண்ணுக்குத் தெரியாமல் சுமக்கும் சுமை, மனதை அழுத்தியதில்லை.

சத்யாவிடம் அவன் இதுவரை பேசியதில்லை. அவளும், அவன் பேச்சுக்காகக் காத்திருந்தவள் போலவும் தோன்றவில்லை. அவள் சுமக்கும் மஞ்சள் சரடே அவளுக்குப் பெருஞ்சுமையாக இருந்தது.

மெய்யப்பன் தயக்கத்தோடு பேசினான்: "என்னங்க... உங்களைத்தான்."

சத்யா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். வழக்கப்படி, தான் தாக்கப்படப் போகிறோமோ என்று நினைத்தவள் போல், சிறிது பின்வாங்கி, பிறகு மலங்கலான பார்வையோடு, அவனைப் பார்த்தாள். 'சொல்லுங்க' என்று அவள் சொல்லவில்லை. பார்வையாலேயே கேட்டாள்.

"அண்ணன் இருக்காரா..."

"டூர் போயிருக்கார்... வாரதுக்கு ஒரு வாரம் ஆகுமாம்."

"அப்படியா... அண்ணி இருக்காங்களா?”

"கோவிலுக்குப் போயிருக்காங்க.."

மெய்யப்பன் தயங்கியபோது, 'ஏன் கேட்கிறீங்க' என்று அவள் கேட்கவில்லை. அவன் இருப்பதை அங்கேயே நிராகரித்தவள்போல் அல்லது மறந்தவள்போல், சிறிது முன்பக்கமாக நடந்து, கேட் கதவைத் திறந்து, அண்ணி வருகிறாளா என்று பார்ப்பவள்போல் தெருவை எட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே போகப் போனாள். மெய்யப்பன் தயங்கியபடியே கேட்டான்.