பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வெளிச்சத்தை நோக்கி


"ஆபீஸ்ல. சாவியை வச்சுட்டேன். இனிமேல் போகமுடியாது. ஒங்க கிட்ட சாவிக்கொத்து இருக்குதா? எந்தச் சாவியாவது பொருந்துதான்னு பார்க்கலாம்."

சத்யா, அவனிடம் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் போனாள் மெய்யப்பனுக்கு எரிச்சலாகவும் , 'சஸ்பென்ஸாகவும்' இருந்தது. உண்டு அல்லது இல்லையென்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். இவ்வளவு அழுத்தமா?

வெளியே போகப்போன மெய்யப்பன், சாவி குலுங்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான். அவன் பார்வையை திருப்புவதற்காக அப்படிச் சாவியை ஆட்டியவளுக்கு, அவன் திரும்பிப் பார்த்ததும், இயல்பான சிரிப்பு எதுவும் வரவில்லை. சாவியை தூக்கிப் பிடித்துக்கொண்டு அங்கேயே நின்றாள். மெய்யப்பன் சாவியை அவளிடமிருந்து பறிப்பதுபோல் பற்றிக்கொண்டு கதவைத் திறக்கப் போனான்.

ஒரு சில சாவிகளைப் போட்டு அவன் பூட்டைக் குடைந்தபோது, சத்யா உள்ளே போய்விட்டாள். பத்து நிமிடம் கழித்து, அண்ணி வருகிறாளா என்று பார்க்க மீண்டும் வெளியே வந்தாள்.

அவள் மீண்டும் உள்ளே போகப் போனபோது, மெய்யப்பன் பூட்டைக் குடைவதை நிறுத்தவில்லை. சாவிகள் வளைந்து விடக் கூடாதே என்று அவளுக்குப் பயம். அவனிடம் கொடுத்திருக்கக்கூடாது என்பது போன்ற ஆதங்கம். சாவி வளைந்தால் அண்ணன் தன்னையும் வளைத்துப் பிடித்து அடிப்பானே என்ற பீதி, சத்யா, மெல்லக் கனைத்தாள். மெய்யப்பன் திரும்பிப் பார்த்தபோது, அவனை விலகி நிற்கும்படி கை ஜாடை காட்டிவிட்டு, பூட்டில் சிக்கிய ஒரு சாவியை இழுத்தாள். அது பூட்டைவிட்டு வர மாட்டேன் என்பதுபோல் மறியல் செய்தது. எப்படியோ சிரமப்பட்டு சாவியை வெளியே எடுத்தவள் அதை உற்றுப் பார்த்தாள். நல்லவேளையாக வளையவில்லை. அதுவே மிகப்