பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

55


பெரிய அபாயத்தில் இருந்து மீண்டுவிட்டது போன்ற உணர்வைக் கொடுக்க, இன்னொரு சாவியை எடுத்து அவள் பூட்டுக்குள் விட்டபோது, சிறிது நேரத்தில், பூட்டு தோல்வியை ஒப்புப் கொள்ளப் போவதுபோல், அதன் வளைவு ஆடியது.

உள்ளே இருந்து அண்ணிக்காரி, "ஏய் மூதி. இன்னும் அங்கே என்ன பண்றே... வாடி தடிமாடு..." என்று கேட்டது அவளுக்குக் கேட்கவில்லை. அவள் அங்கே வந்து தன் தலையை உலுக்கியபோதுதான், சத்யா நிமிர்ந்து பார்த்தாள். திறந்த பூட்டு, சாவியின் உலுக்கலில் அங்குமிங்கும் ஆடியதுபோல், அவள் தலை அண்ணியின் குலுக்கலில் இரண்டு தடவை ஆடி நின்றது. எப்போது வந்தாள்...?

எள்ளும் கொள்ளும் விதைப்பதற்காகவே இருப்பது போல் தோன்றிய அண்ணியின் முகம், எள்ளடித்த களம்போல் நரம்பு தெறிக்க துடித்தது. ஒரு பெண் அவமானப்படும்போது, பெண் என்ன... வேறு எந்த மனிதரும் அவமானப்படும்போது, அதை நின்று கவனிப்பது நாகரிகமல்ல என்று நினைத்து, மெய்யப்பன் உள்ளே போனான். இது அண்ணிக்கு மெதுவாக வந்த சந்தேகத்தை வேகமாக்கியது.

அண்ணிக்காரி சத்யாவை இழுத்துக் கொண்டுபோய், இரண்டு போர்ஷன்களுக்கு மத்தியில் உள்நோக்கிப் போன பாதையில் நிறுத்திப் புலன்விசாரணை செய்வது, மெய்யப்பன் காதில் வெடிகளாக விழுந்தன.

'எதுக்குடி அங்கே போனே?"

'சாவியத் தொலைச்சிட்டேன்னாரு... வேற சாவி இருக்கான்னு கேட்டாரு..."

"தொலைச்சா என்னடி? சாவியத் தொலைச்ச சாக்குல ஒன்னையும் தொலைக்கப் பார்ப்பான். அதுக்கும் சம்மதிப்பியா? அப்புறம் நாங்கதான் நாக்கைப் பிடுங்கிட்டு