பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

57


மெய்யப்பன் பேண்டையும், சிலாக்கையும் கழற்றிப் போட்டுவிட்டு, லுங்கியைக் கட்டிக் கொண்டு, கட்டிலில் படுக்க வேண்டும் என்றுதான் போனான். இப்போது அந்த அறையே அவனுக்குச் சமாதி போலிருந்தது. எங்கேயாவது நடத்து கொண்டே இருக்கவேண்டும்... நிற்கப்படாது... உட்காரக்கூடாது.

வெளியே வந்த மெய்யப்பன், கதவைச் சாத்திவிட்டு, அதற்குப் பூட்டில்லை என்பதைப் பற்றியும் கவலைப்படாமல், வெளியே வந்து உள்ளே எட்டிப் பார்த்தான். சத்யா, அண்ணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவள் போல் வாசலுக்கு வெளியே குத்துக் காலிட்டு, அதில் முகம் புதைத்து, தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள். அவனுக்கு என்னவோ போலிருந்தது. ஒரே தாவாகத் தாவி தெருவிற்கு வந்தான்.

பல்லவ பஸ்களும், பார்த்த மனிதர்களும், ஒலி முழக்கம் செய்த வானொலிப் பெட்டிகளும், அவனுக்கு ரதங்களாகவும், பிணங்களாகவும், ஒப்பாரியாகவும் தோன்றின. தன் பிணத்தைத் தானே சுமந்து கொண்டு போகிறவன்போல் மற்றவர்கள் ரசித்த ஆரவாரம் அவன் மட்டில் சூன்யமாகப் பட, அவன் கண்டபடி நடந்தான். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மெஸ்ஸை நோக்கிப் போனவன், அங்கே வாசல் வரை சென்று மாடிப்படி ஏறியவன், ஏறிய வழியாக இறங்கி, இருப்பிடம் வந்தான். சாப்பிடத் தோன்றவில்லை.

இன்னும் சத்யா வீட்டுக்கு வெளியே இருந்த இடத்திலேயேதான் இருந்தாள். இடதுகால் தூக்கி நிற்க, அதில் முகம் கவிழ, இருந்த இடத்திலேயேதான் இருந்தாள். அவனுக்கு மனம் கேட்கவில்லை.

குளியலறைக்கு ஒரு டர்க்கி டவலுடன் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு, முற்றத்திற்கு வந்தான்.வெளியேவந்த அண்ணிக்காரியை நேராகப் பார்க்காமல், மெள்ள