பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லட்சியவாதிகளின் பிரதிநிதியாக மெய்யப்பன் விளங்குகிறான். இந்தப் போராட்டம் அவனது உடலைச் சிதைக்கிறது; பொருளாதாரத்தைச் சேதப்படுத்துகிறது; உள்ளத்தை ரணகளமாக்குகிறது. மெய்யப்பன் மனநோயாளி ஆகிவிடுகிறான். அவனால் தன் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பிரமைகளையும் வகைப்படுத்தி ஆராய முடியாமல் போய்விடுகிறது.

ஆகவே, மெய்யப்பனைக் குணப்படுத்த, அவனைப்போல் தத்தளிக்கின்ற லட்சியவாதிகளுக்கு வழிகாட்ட, மனநல மருத்துவராக டாக்டர்.ரகுராமன் வருகிறார். அவருடைய அறிவுரைகளின் வடிவில் திரு. சு. சமுத்திரம், வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம் குறித்துத் தனது கண்ணோட்டத்தைத் தெளிவாக்குகிறார்.

மெய்யப்பனிடம் என்ன குறை? நல்லவன்தான் என்றாலும் அவன் இயங்கிய சமூகம் குறுகியது. அலுவலகத்தில் சிலருக்கும் வெளியில் சத்யாவிற்கும் அவனது கருணை கிடைத்தது. பாலைவனத்தில் விழுந்த மழைத்துளி போல் இது போதாது. அறிவை விசாலமாக்கி, சேவையின் எல்லையை விரிவாக்கி, தனி மனிதன், சமூக மனிதனாக மாறவேண்டும். கார்ல் மார்க்சும் சரி, காந்தியடிகளும் சரி, சமூகச் சிந்தனையை விரிவாக்குவதையே வற்புறுத்தியதைத் திரு. சு. சமுத்திரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நாவலில் வருகின்ற சம்பவங்கள். உண்மையில் நடந்தவை என்கிறார் திரு. சு. சமுத்திரம். அதனால்தான் இந்நாவலைப் படிக்கும் போது யதார்த்தமான வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிப்பது போன்ற உணர்வை நாம் பெறுகிறோம். தமிழ் நாட்டு இளைய தலைமுறையினர் அனைவரிடமும் இருக்கவேண்டிய இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்கள் புத்தக நிலையத்திற்கு அளித்த சு. சமுத்திரம் அவர்களுக்கு நன்றி. திருவரசு புத்தக நிலையத்தார்