பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வெளிச்சத்தை நோக்கி...

நடந்தபடி, "என்னால யாருக்கும் சிரமம் வேண்டாம்... இந்த மாதம் முடிஞ்சதும் காலி பண்ணிடுவேன்... வீட்டுக்காரர் வந்தால். நீங்களே சொல்லிடலாம்..." என்று சொல்லிவிட்டு, அவன் நடந்து கொண்டிருந்தபோது, "ஆம்புள இல்லாத சமயத்துல. பொம்பிளைங்க கிட்ட எதுக்காகப் பேசணும்... வீட்டுக்காரன் கிட்ட சொல்ல... நான் என்ன வேலைக்காரியா" என்ற வார்த்தைகள் காதில் வந்து விழுந்தன. அதை வாங்காதவன்போல் அவன் அறைக்கு வந்து கதவைத் தாளிட்டான். ஆனால் மனதைத் தாளிட முடியவில்லை.

அண்ணிக்காரி மீண்டும் சத்யாவை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணிடமிருந்து எந்தக் குரலும் எழும்பவில்லை. ஒடுங்கியவளாய் - ஒடுக்கப்பட்டவளாய், குரலடங்கி, முடங்கிக் கிடந்த அந்தப் பெண்ணிற்கு, அவன் இரங்கியபோது விமலாவின் நினைப்பு மனதில் உரசியது. 'எந்தச் சமயத்தில்... எந்த எண்ணம் வருது பார்... நான் நிஜமாகவே மனிதன்தானா..."

மெய்யப்பன் தன்னை வெறுத்தான். சுற்றுப்புறத்தை வெறுத்தான். பிறந்ததை வெறுத்தான். இறக்காமல் இன்னும் இருப்பதற்காக வெறுத்தான். எல்லாவற்றையும் வெறுத்து வெறுத்து, வெறுப்பே ரசனையானதுபோல் பேண்ட் சண்டையைக் கழற்றி வெறுப்போடு எறிந்தான். கட்டில் காலை எட்டி உதைத்தான். கடிகாரத்தை வீசி எறிந்தான்.

உடல் முழுவதும் அணுஅனுவாக வியாபித்து, பிறகும் இடம் கிடைக்காமல் திண்டாடி, வெறுப்பை விடுபவன் போல், வெறுமையோடு சிரித்துக் கொண்டான். விளக்கு எரிந்து கொண்டிருந்தாலும், அந்த அறை முழுவதும் அவனுக்கு இருள் மயமாகத் தெரிந்தது.