பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 வெளிச்சத்தை நோக்கி...

கும்பிட்டு, “ஸார், நீங்கதான் சார் என்னைக் காப்பாத்தணும். இல்லன்னா, என் பிள்ளைங்க தெருவுல நிக்கும்" என்றாள். அந்தக் காட்சியைக் கற்பனை செய்தவள் போலவும், அதைப் பார்க்க மறுப்பவள் போலவும் கண்களை மூடிக் கொண்டாள். மூடிய கண்களைத் திறக்காமலே, "ஒங்களை விட்டால், எனக்கு வேறு ஆதரவில்ல ஸார்" என்று சொல்லி விட்டு, மீண்டும் விம்மினாள்.

"நான் யாரும்மா ஒங்களுக்கு ஆதரவு தரதுக்கு? அதுக்குத்தான் அந்த ரெளடி மெய்யப்பன் இருக்கானே."

வாணி தலையை நிமிர்த்தி, கைகளை அம்புக்குறி போல் வளைத்துப் பக்கவாட்டில் வைத்தபடி, பத்ரகாளிபோல் கோபத்தோடு கத்தினாள்.

"வினையே அந்தப் பித்துக்குளியாலதான் ஸார் வந்தது. நீங்க அன்றைக்கு என் கையைப் பிடிச்ச படபடப்புல, அந்த பைத்தியக்காரன்கிட்ட லேசா உளறிட்டேன். இவ்வளவுக்கும் கோபப்படாமத்தான் சொன்னேன். உடனே வந்து அவன் ஒங்கள இப்டி மிரட்டுவான்னு நினைக்கல.... சத்யமாய் நினைக்கல ஸார்."

மானேஜர் அடக்கமில்லாமல் சிரித்தார். "சிலர், பிறத்தியார் பாதிக்கப்படுவாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டே, ஹீரோவாய் மாறதுக்காக, பிறத்தியார் கஷ்டத்தையே மூலதனமாகப் போட்டு, பாறையை பிளக்கது மாதிரி பேசுவாங்க... மெய்யப்பன் அந்த டைப்.... இப்போவாவது புரியுதா?”

வாணிக்கு எல்லாமே புரிந்தது. "கத்தன்... துஷ்டனோட பலன் செய்யும்." என்ற மலையாளப் பழமொழியின் அர்த்தமும் புரிந்தது. அதோடு மானேஜர், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சபலம் ஏற்பட்டு, பிறகு மனச்சாட்சியால் கொல்லப்படும் நிலையில் இருப்பவரல்ல என்பதும், இந்த வகையில் அவர் ஒரு அரசியல்வாதி என்பதும், அவளுக்குப் புரிந்தது. புரியப் புரியக் கண்கள் குளமாயின. கைகள் கும்பிட்டன.