பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 63


கனிய வேண்டியது காய் நிலையில் இருப்பதை உணர்ந்த அந்த 'பழுத்த' மானேஜர் மேலும் அதட்டினார். "எத்தன தடவம்மா ஒங்களுக்குச் சொல்றது? ப்ளீஸ் லீவ் மீ அலோன். நான் சொன்னால் சொன்னதுதான். அரைமணி நேரத்திற்குப் பிறகு ஆர்டரை 'கலெக்ட்' பண்ண வாங்க. ஸாரி, நீங்க வரமாட்டீங்க கூப்பிட்டாலும், அலட்சியமாய் வீட்டுக்குப் போகிறவங்களாச்சே... அதனால... நானே வந்து கொடுக்கறேன். இப்போ போங்க... ஐ ஸே, கெட் அவுட்"

வாணி ஒரு கையை மேஜையில் ஊன்றியபடியே, இன்னொரு கையால் முகத்தை மறைத்தபடி விம்மினாள். "அய்யோ... அந்தப் பாழாப் போறவனால... என் நிலமை இப்படி ஆயிட்டே... ஆயிட்டே" என்று இடையிடையே விட்டும் விடாமலும், பட்டும் படாமலும் உளறிக் கொண்டே அழுதாள். அவள் ஏங்கி அழும் ஒலி வெளியே கேட்கு மளவிற்கு வலுத்தது. மேஜையில் ஊன்றிய கை தனியாகத் துண்டித்து விழப்போவதுபோல் ஆடியது. இந்த வேலை போய்விட்டால், வீட்டை விட்டு தெருவுக்குப் போக முடியாது. இரண்டு மாத வாடகைப் பாக்கி இருக்கிறது. அவள் தன்னைக் கட்டுப்படுத்தத்தான் பார்த்தாள். முடியவில்லை. காட்டாற்று ஒலியுடன் அழுகையும், கண்ணீரும் ஒன்றாகப் பாய்ந்தன.

மானேஜர் மர்மப் புன்னகை ஒன்றை மலரவிட்டுக் கொண்டே, "அடடே... என்னம்மா இது... இப்படியா அழுகிறது. நீ அழுதால் எனக்கும் அழுகை வரும் போலிருக்கே... அழாதம்மா..." என்று வார்த்தைக்கு வார்த்தை, 'அம்மா. அம்மா என்று சொல்லிக் கொண்டே, அவளுக்குப் பின்புறமாகச் சென்று, அவளை மார்போடு சேர்த்து அணைத்தபடி, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களைத் துடைத்தார். அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நின்றபோது, மேலும் அவளைத் தன் மார்புடன் நெருக்கிக் கொண்டே, "ஒனக்காக ரொம்ப வருத்தப்படுறேன்... டோண்ட் ஒர்ரி... சாயங்காலமாய், எல்லோரும் போன பிறகு, இரண்டு பேருமாய் அந்த ஃபைலைத் தேடலாம்..." என்றார்.