பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 65


அவளருகே போகும் போதெல்லாம், அவள் எழுந்து இன்னொருவர் பக்கம் போய் விடுகிறாள். மஞ்சள் வெயில் விழும் முன்பாகவே ரிஜிஸ்டர் கட்டுக்களோடு மானேஜர் அறைக்குள் போய்விடுகிறாள். மெய்யப்பன், அவள் கற்பைப் காப்பாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டியவனாய், சில மாலைப் பொழுதுகளில் வெளியே காத்திருந்து பார்த்தான். கூக்குரல் ஏதும் கேட்கவில்லை.

இது போதாதென்று, இந்தக் குமார் வேறு.... எந்தச் சண்டை வந்தாலும் முதலில் பேசும் அவன், இப்போது நட்பை முறித்ததுபோல், இவனைக் காணும் போதெல்லாம் முகத்தை முறித்துக் கொள்கிறான். காபி சாப்பிட்டாலும் சரி, டிபன் சாப்பிட்டாலும் சரி, இவனுக்கும் சேர்த்து வாங்கும் அவன், இப்போது தனக்கு மட்டுமே வாங்கிக் கொள்கிறான். மெய்யப்பனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தானே வலியப் போய் அவனிடம் பொதுப்படையாய் பேசிவிட்டு, பிறகு வாணிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தையும், தான் மானேஜரை மிரட்டியதையும், நடித்துக் காட்டுவது போல் பேசினான்.

குமார், எல்லாவற்றையும் எந்தவிதச் சலனமுமில்லாமல் கேட்டு விட்டு, பிறகு "ஒன் புத்தி, குரங்குப் புத்தி.... மந்திக்கு ஒன்றே குறி என்பது குரங்குக்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, ஒனக்குப் பொருந்தும். நான் சொன்னால், நீ கேட்கப் போறதும் இல்லை. ஆனால், நீ யாரையெல்லாம் நட்புப் பாராட்டி நம்புறியோ... அவங்கெல்லாம் ஒன் காலை வாரி விடுறாங்க... இது ஒன்னோட ராசி... நீ என்கிட்ட நட்பாய் இருந்து, என்னை முழுசும் நம்பி, அதனால நானும் ஒன் காலை வாரி விடப்படாது பாரு... அதனால... நான் இனிமேல் விலகி இருக்கதுன்னு தீர்மானிச்சுட்டேன்..." என்று கண்டிப்பாய் சொல்வதுபோல் தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

மெய்யப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை மாதிரி பார்த்தான். குமாரோ ரிஜிஸ்டரில் வைத்த கண்ணை

5