பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 67


வந்தது. அவளே பேச விரும்பாதபோது, தான், அவளுக்காக எதிர்பார்த்து இருப்பது பைத்தியக்காரத்தனம்தானே என்பதுபோல், தனக்குள்ளேயே ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டான். பிறகு பைத்தியமாய் ஆனாலும், முழு பைத்தியமாய் ஆகலாம் என்று ஒரு பதிலையும் சொல்லிக் கொண்டான்.

எப்போதாவது ஓரிரண்டு சிகரெட்டுகளைப் பற்ற வைப்பவன், அப்போது ஒரு பாக்கெட்டைத் தீர்த்து விட்டான். மணி ஏழாகிவிட்டது. வாணியைக் காணவில்லை. ஒருவேளை, வாணியக்காவிடம் அந்த மானேஜர் முறை தவறி நடக்கும் முயற்சியில் இருப்பானோ? ஓடிப்போய் அக்காவின் மானத்தைக் காப்பாற்றலாமா? மெய்யப்பன், அலுவலகத்திற்கு உள்ளேயும் போக முடியாமல், வெளியேயும் நிற்க முடியாமல், சந்தேக வேதனையில் துடித்தான். டீக்கடையில் இருந்தவர்கள் கூட அவனை ஒரு மாதிரிபார்த்தார்கள்.

அலுவலகத்தில் இருந்து மானேஜர் கார் புறப்பட்டது. மெய்யப்பன் விறைப்பாக நின்றான். மானேஜர் மோசமானவன் என்பதற்காக, அவன் சொல்லும் வேலையை அக்காவால் தட்ட முடியுமா.... அதுவும் ஸ்டெனோகிராபராக இருக்கும்போது.... இவ்வளவு மிரட்டியபிறகு, மானேஜருக்குத் தான் தைரியம் வருமா...?

தெருவுக்கு வந்த மானேஜரின் காரைப் பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஆனால், அது உண்மைதான். கண்ணுக்குச் சிந்திக்கும் சக்தி கிடையாததால், அது உள்ளதை உள்ளபடிக் காட்டியது. வாணியக்கா, காரின் முன்னிருக்கையில் மானேஜருடன் நெருக்கமாக உட்கார்ந்திருக்கிறாள். மானேஜரின் இடது கை, அக்காவின் இடது தோளில் கிடப்பது நன்றாகத் தெரிகிறது. சந்தேகமில்லை. அது வாணியக்காதான். எப்படிச் சிரிக்கிறாள்? அன்று அழுதவளா இப்படிச் சிரிக்கிறாள்? அதுவும், தன் தோளில் தொங்கும் மானேஜரின் கையை பிடித்துக் கொண்டே...