பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 வெளிச்சத்தை நோக்கி...

மெய்யப்பன், அவன் கண்ணில் தூசியைப் பரப்பிக் கொண்டு போகும், அந்த 'பச்சைக்' காரையே கண் கொட்டாது பார்த்தான்.நிற்பது நடுரோடு என்ற நினைவில்லாமலே பார்த்தான். அந்தக் காராலேயே அடிபட்டு, உடம்பு சின்னாபின்னமாகி செத்துப் போனது போலவும், இப்போதுதான் அங்கே பேயுருவாக நிற்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. பின்னால் வந்த இன்னொரு கார் அவன் காலில் மோதாக் குறையாக நின்று ஹாரன் அடித்தது. அதற்கும் அவன் நகராமல் நின்றபோது, டிரைவர் இறங்கி வந்து, அவன் கையைப் பிடித்து, தரதரவென்று இழுத்து, ரோட்டு முனையில் நிறுத்திவிட்டு, மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தார். காருக்குள் இருந்த ஆண் பெண் அத்தனைபேரும் சிரித்தார்கள். சிரிப்போடு கார் போனபோது, மெய்யப்பன் சிலிர்ப்போடு திரும்பினான். டீக்கடையில் உள்ள வானொலிப் பெட்டி, "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்” என்று பாடியபோது, "அம்மம்மா உலகினிலே யாவும் வஞ்சம்....” என்று மெய்யப்பனே தன்னையறியாமலே சத்தம் போட்டுக் கத்தினான்.

(10)

எப்படி வீட்டுக்கு வந்தோம் என்பது அவனுக்கே நினைவில்லை. பஸ்ஸில் ஏறவில்லை. ஆட்டோவில் அமர வில்லை. நடந்தது போலவும் தெரியவில்லை. எப்படியோ வந்த ஞாபகம் இருந்ததே தவிர, எப்படி வந்தோம் என்று தெரியவில்லை. வீட்டுக்குள் வந்தவன், லுங்கியைக் கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தான். உடம்பு ஆடுவது நின்றது. உள்ளத்தில் லேசாக நிதானம் ஏற்படுவது போலிருந்தது.