பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 69


நேற்று குமார் சொன்னதின் அர்த்தம் அவனுக்குப் புரியப் புரிய, வாழ்க்கையே அவனுக்கு அனர்த்தமாகத் தெரிந்தது. நடந்ததையெல்லாம் நிதானமாகச் சிந்தித்து, வாழ்க்கையைப் பற்றியும், வாழும் விதம் பற்றியும், ஒரு முடிவுக்கு வரலாம் என்பதுபோல், அவன் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கால்களை மாற்றிப் போட்டபோது, உள்ளே இருந்து ஓலம் கேட்டது. சத்யாவின் ஓலம். அவள் அழுதிருக்கிறாள்; ஆனால், இப்படி அழுததில்லை. பிராணனே அழுவது போன்ற ஓலம். பயங்கரமான சத்தம்.

"அடிக்காத அண்ணா... நான் ஒரு பாவமும் அறியாதவள். சாவியைக் கொடுக்கும்போது தவிர, வேற எந்தச் சமயத்துலயும் நான் பேசினதில்ல. சத்தியமாப் பேசுனதில்ல அண்ணா... வேணுமுன்னா கொன்னுடு. இப்படிச் சித்திரவதை பண்ணாத அண்ணா... நாளைக்கு நானே போயிடுறேன். அய்யோ, என் காலு போயிட்டே... என் கன்னம் போயிட்டே.... என் வயிறு வலிக்கே... அண்ணா..."

மெய்யப்பன், தன்னையறியாமலே எழுந்தான்.

சத்யாவின் ஓலம் நின்று விட்டது. அதேசமயம், அண்ணன்காரன், "ஒன்னை என்ன பண்றேன் பாரு... சாவி கொடுக்கிற சாக்கிலயா போனே? இன்னையோட நீ சரி என்று சொல்லிக் கொண்டே அடிக்கும் சத்தமும், "மூதேவிய விட்டுடுங்க ஊரான் பெண்டாட்டிய நாம ஏன் அடிக்கணும். நாளைக்கே கட்டுனவன் முன்னால நிறுத்திட்டு வாங்க..." என்று அண்ணிக்காரி கீதாவுபதேசம் செய்வதும் கேட்டது. இன்னும் அடிப்பது முடியவில்லை. ஆனால், சத்யா அழுவது நின்று விட்டதே... அழ முடியாதபடி அண்ணன் அவள் வாயில் குத்தியிருப்பானோ... சத்தத்தை எழுப்பும் தொண்டையைக் கிழித்திருப்பானோ....

மெய்யப்பன் ஆவேசமாக உள்ளே போனான்.

சத்யா துவண்டு கிடந்தாள். வீட்டுக்கு வெளியே கிடந்த மாவரைக்கும் ஆட்டுக் கல்லுக்கருகே, குப்புறக் கிடந்தாள்.