பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 வெளிச்சத்தை நோக்கி...


சிறிதாய் போன வலதுகால், புடவை விலகி, பல்லியின் வால் போல் துடித்துக் கொண்டிருந்தது. அண்ணன்காரன், அடித்த கை வலித்ததாலோ என்னவோ, இப்போது அவளைக் காலால் உதைத்தான். அவன் உதைக்க உதைக்க, அவள் லேசான முனகலுடன் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்தாள்.

மெய்யப்பன் நேராக, உதைப்பவன் கையைப் பிடித்து, தரதரவென்று இழுத்து, சிறிது தூரத்தில் நிறுத்திக்கொண்டு, "ஸார்... நீங்க செய்யுறது அக்கிரமம் ஸார்... இந்த பூமியறிய சொல்றேன்... என் வேலை சத்தியமாய் சொல்றேன். நான் அவங்களை தப்பா நினைச்சதில்ல... அவங்களும் என்கிட்ட தப்பா பேசினதில்ல... தப்பாய் நினைக்கது நீங்கதான்...” என்றான்.

அவன் குறுக்கீடலை எதிர்பாராத அண்ணன்காரன் எப்படிப் பதிலளிப்பது என்று யோசித்தபோது, அடிதடி வருமோ - அதில் புருஷன் உதைபட்டுப் போவானோ என்று உள்ளூறப் பயந்து ஒப்பாரி போடப்போன அண்ணி, மெய்யப்பன் நிதானமாக நிற்பதையும், அவன் கையில் ஒரு சின்ன கம்புகூட இல்லாததையும் பார்த்துவிட்டு, எகிறினாள்.

"ஏன் கல்லு மாதிரி நிக்கீங்க..... இது நம்ம வீட்டுச் சமாச்சாரம்...எவனுக்கும் இதுல தலையிட உரிமைகிடையாதுன்னு சொல்லுங்க.... அவளை அடிச்சால், இவனுக்கென்ன வந்ததாம்..."

அண்ணன்காரனுக்கும் ரோஷம் வந்தது. "நான் அவளை அடிப்பேன். ஒதைப்பேன்... ஒனக்கென்ன வந்தது. ஏய்... எடுடி அரிவாள... தடுக்க வாரவனையும், ஒரே வெட்டாய் வெட்டுறேன்...எல்லாம் இந்த பழிகாரியால வந்தது..."

அண்ணன், மெய்யப்பனை அலட்சியப்படுத்திக் கொண்டே ஓடிப்போய், இன்னும் சுரணை இல்லாதவள் போல் குப்புறக் கிடந்த சத்யாவின் விலாவில் ஒரு உதைவிட்டு,