பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 71


மீண்டும் இன்னொரு காலைத் தூக்கியபோது, மெய்யப்பன் அவன் கைகளை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு, "ஸார்.... இந்த நாட்ல ஒரு நாயை அடிக்கக்கூட நமக்கு உரிமை கிடையாது. மிருகங்களை காக்கக்கூட சங்கம் இருக்கிற காலத்துல... கூடப் பிறந்த தங்கையை... இப்படியா ஸார் அடிக்கது? நீங்க அடிக்கிறபோது, ஒரு பிரஜை என்கிற முறையில, அதைத் தடுக்கிறதுக்காக... நான் எந்த லெவலுக்கும் போகத் தயார் ஸார்...” என்று சிறிது அதட்டலாகக் கேட்டான். பிடியையும் விடவில்லை.

அண்ணிக்காரிக்கு, கணவனின் ஆவேசம் தாவியது.

"இந்த முண்ட.... அவனுக்கு நல்லாத்தான் சொல்லிக் கொடுத்திருக்காள். இவளை இப்பவே ஒரே வெட்டா வெட்டிப் போடுங்க... இவன் என்ன செய்யுறான்னு பார்ப்போம்."

அண்ணன்காரன், மெய்யப்பனின் பிடியில் இருந்து விடுபடத் திமிறிக் கொண்டே, தங்கையைப் பார்த்துக் காலை நீட்டினான். மெய்யப்பன், "ஸார் நான் அப்புறம் பொல்லாதவனாய் ஆயிடுவேன்..." என்று சொல்லிக் கொண்டு பிடியை அழுத்தினான்.

கீழே துவண்டு கிடந்த சத்யா தட்டுத் தடுமாறி எழுந்தாள். நிற்க முடியாமல் போனதால், சுவரை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டே கத்தினாள்.

"யோவ்... எங்கண்ணன் என்னை அடிச்சா ஒனக் கென்னய்யா வந்தது...? நான் யாரு? நீ யாருய்யா? நீ ஏய்யா தலையிடுறே...? ஒங்கிட்ட தெரியாம சாவியக் கொடுத்துட்டு நான் படுறது போதாதா... போய்யா... மானமுள்ளவன்னால்... சொன்னபடி வீட்டைக் காலி பண்ணிட்டு ஒரேயடியாய் போய்யா... அண்ணா...! என்னை வெளியேத்தணுமுன்னாலும் சரி... கொல்லணுமுன்னாலும் சரி... வேற காரணத்தைக் கண்டுபிடிண்ணா... நான் காலுலதான் நொண்டியே தவிர... கற்பில இல்லண்ணா... அண்ணா... அண்ணா..."