பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 வெளிச்சத்தை நோக்கி...

மெய்யப்பன் விக்கித்து நின்றான். அவள் அண்ணனை விட்டுவிட்டு, சிறிது விலகி நின்றான். சிறிது நேரம் கூனிக்குறுகி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டு நின்றவன், பிறகு, மின்வெட்டுப்போல் கால்வெட்ட தன் அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டான். மனத்திரையில் விமலா வந்தாள். வாணியும் சத்யாவும் நிழலுருவங்களாகத் தெரிந்தன. வாணி வந்தபோது, விமலாவும் சத்யாவும் நிழலுருவங்கள் போல் ஒருவர் மாற்றி ஒருவராக வந்து, அந்த உருவங்கள் அஸ்தமித்தபோது, மானேஜர் கொக்கரித்த சிரிப்போடும், ரவி பரிகாசமாகவும், குமார் உதட்டைப் பிதுக்கிக் கொண்டும் வந்து போனார்கள்.

திடீரென்று, சத்யா மீண்டும் ஓலமிடுவது அவனுக்குக் கேட்டது. 'அய்யோ என் வயிறு போச்சே' என்றும், 'அய்யோ என் இடுப்பு போச்சே' என்றும் அவள் விட்டு விட்டுக் கத்துவது காதைக் குத்தியது. பிறகு சத்தமே இல்லை. அடிபட்டு அடிபட்டு, வலிக்கே வலியெடுத்துப் போனதோ... ஒரேயடியாய் அடியின் சொரணை இல்லாமல் போய் விட்டாளோ... போகட்டும்.... எக்கேடாவது கெட்டுப் போகட்டும்... காதலியே கைவிட்டாள்... உடன் பிறவா அக்காளே ஏமாற்றிவிட்டாள்... உயிர் நண்பனே ஒதுங்கி விட்டான்... இவள் யார்? நான் யார்? ஆமாம் நான் யார்? யார் பெற்ற பிள்ளை? எத்தனை நாள் வாழப் போகிறேன்... சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, எத்தனை நாள் இப்படிச் சுமப்பது? இதற்கு முடிவே இல்லையா.... விடிவே கிடையாதா...

மெய்யப்பன் நாற்காலியில் உட்கார்ந்தபடி, கண்களை மூடிப் பார்த்தான். மூடிய கண்களைத் திறந்து பார்த்தான். விளக்கை அணைத்துப் பார்த்தான். அணைத்த விளக்கைப் போட்டுப் பார்த்தான். அந்த அறையே அவனுக்கு சமாதி போலவும், அந்த வீடே ஒரு சுடுகாடு போலவும் தோன்றியது. அத்தனை உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதியவை பிரிந்து, பிரிந்தவை மோதி, உணர்வே இல்லாதவனாய், உள்ளமே செத்துப் போனவனாய், ஏதோ