பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 வெளிச்சத்தை நோக்கி...


சொறி நாய் ஒன்றின் கடியில் சிக்கியது போன்ற அவல ஒலி - வாணியைப் போல எல்லாவற்றையும் கவனிக்காததுபோல் இருந்த இயற்கைக் சூழல் - குமாரைப் போல திடீரென்று வீசிய பேய்க் காற்றில் ஏதோ ஒரு மரக்கிளை கீழே விழுந்தது அவனைப்போல.

நாற்காலியில் இருந்து கீழே விழுந்த மெய்யப்பன், எழுந்திருக்க வேண்டும் என்ற உணர்வொடுங்கியவனாய், கால்மணி நேரம் வரை அப்படியே கிடந்தான். தாகம் எடுப்பது போலிருந்தது. முட்டிக் கால்களில், முன் கைகளை ஊன்றிக் கொண்டே எழுந்தான். சுவரின் மூலையில் இருந்த மண் கூஜாவில் இருந்து ஒரு டம்ளர் நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டு வாயருகே கொண்டு போனான். இரண்டு சொட்டு வாயில் விழுந்ததுதான் பாக்கி.....

திடீரென்று, டம்ளரைப் பதறிப்போய் கீழே போட்டு விட்டு, விளக்கைப் போட்டான். டம்ளரில் அக்கினித் திராவகம் இருந்தது போலவும், அதை அவன் குடித்து நாக்கில் சுடுவது போன்றும் ஒரு உணர்வு. கீழே விழுந்து கிடந்த டம்ளரையே வெறித்துப் பார்த்த மெய்யப்பன், எரிந்து கொண்டிருந்த பல்பை ஏறிட்டுப் பார்த்தான். அந்த பல்ப் ஆயிரம் சுக்கலாக உடைந்து, அவன் கண்களுக்குள் குத்துவது போன்ற ஒரு பிரமை... பல்பில் இருந்த விடுபட்டு, சுவரைப் பார்த்தான். கரப்பான் பூச்சியைக் கெளவிய பல்லி, மிகப் பெரிய உருக்கொண்டு அவனைக் கெளவுவது போன்ற எண்ணம். அவன் மிகப்பெரிய கரப்பான் பூச்சியானது மாதிரியும், அந்த பல்லி, அதைவிட மிகப் பெரிய உருக்கொண்டு, அவனை பின்பக்கமாகப் பிடித்துத் தின்பது மாதிரியுமான ஒரு பயங்கரமான கற்பனை, நிஜமான உண்மையைவிட அழுத்தமாக வந்த கற்பனைப் பயம்...

மெய்யப்பனுக்கு அந்தக் குளிர் காலத்திலும் உடலெல்லாம் வியர்த்தது. உடம்பின் ஒவ்வொரு அவயங்களும் ஆடின. சற்றுத் தொலைவில் காத்து நின்ற ஏதோ ஒரு கருவுருவம், முழுக்க முழுக்க முண்டமாக இருந்த