பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 75

ஒன்று, அவனை ஒரே தாவாகத் தாவிப் பிடித்துக் கொண்டது போன்ற பிரமை.‌. சொல்ல முடியாத... சொல்லில் அடங்காத பயம். அடிவயிற்றில் கிளம்பி, நெஞ்சை உதைத்து, நெற்றியை உடைப்பது போன்ற பயம்... கொலையைப் பார்க்கும்போதோ, குற்றியிராய் விபத்தில் துடிப்பவரைப் பார்க்கும்போதோ ஏற்படும் பயத்தை, வெறுமனே ஒரு துளியாக்கும் கடலளவுப் பயம்... விளங்காத... விளக்க முடியாத பயம்...

மெய்யப்பனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. வெறி பிடித்தவன்போல், விளக்கை அணைத்துவிட்டு, கட்டிலில் மல்லாந்து படுத்தான். அந்தக் கட்டிலே பாடையாகி, நான்கு பேர் தன்னைச் சுமந்து கொண்டு, சுடுகாட்டை நோக்கிப் போவது போன்ற கற்பனை கற்பனையிலும் விளக்க முடியாத - கற்பனையில் இருந்து தப்பிக்கும் வகையில் அவன், கட்டிலில் இருந்து துள்ளியெழுந்து, கீழே தரையில் படுத்தான்.

திடீரென்று, அந்தத் தரை கீழ்நோக்கிப் போவது போலிருந்தது. அவனை மட்டுமே இழுத்துக் கொண்டு அதல பாதாளத்தைப் பார்த்து வேகமாய் பாய்வது போன்ற எண்ணவோட்டம். மீண்டும் அவன் துள்ளியெழுந்து நாற்காலியில் சாய்ந்தான். நாற்காலி இருக்கையில் ஆணிகளை அடித்து வைத்திருப்பது போலவும், அவற்றின் மீதுதான் அவன் அமர்ந்திருப்பது மாதிரியுமாக சிக்கடைந்த எண்ணம்.

மெய்யப்பன் தட்டுத் தடுமாறி எழுந்து விளக்கைப் போட்டான். சுவரில் கரப்பானைப் பற்றிய பல்லி...இல்லை...இல்லை... கரப்பான் பூச்சியாக மாறி அவனைக் கெளவிய பேய்ப் பல்லி... அவன் கையிழந்து, காலிழந்து முண்டமாய் நடப்பது போன்ற தலைகால் புரியாத எண்ணம்.

மெய்யப்பன் தலை இருக்கிறதா என்பதுபோல், அதை உதறிவிட்டுக் கொண்டான். விளக்கைப் பார்த்தான். பிறகு, கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டான். அப்படியே வெறித்து நின்றான்.