பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 வெளிச்சத்தை நோக்கி...

நாற்காலியில் உட்கார முடியவில்லை. ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. கீழே தரையைப் பார்க்க முடியவில்லை. அதல பாதாளம் அழைக்கிறது. மேலே நோக்க முடியவில்லை. அந்த அறையின் கூரை இடிந்து, அவன் தலையில் விழுந்து, அவனுடன் இடிபாடுகளோடு இடிபாடாக விழுகிறது. இந்த பயங்கரமான எண்ணோட்டத்தில், விமலாவும், வாணியும், சத்யாவும் கசிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. குறிப்பாக, விமலாவைப் பற்றிய உணர்வின் அடித்தளத்தில் இந்தப் பயங்கர பைசாச உணர்வுகள் ஊர்வலம் போவது போலிருந்தது.

மெய்யப்பனுக்கு அந்த அறையை விட்டு வெளியேறி எங்கேயாவது ஓடவேண்டும் போலிருந்தது. குமாரின் இருப்பிடம் போய் அவனை எழுப்பி எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு. 'இருக்கானோ..? இல்லையோ..?'

மேல் சட்டை போடவேண்டும் என்ற நினைப்பு இல்லாமலே, லுங்கி பனியனுடன் அறைக்கு வெளியே வந்து, காம்பவுண்ட் கதவைத் திறந்து கொண்டு தெருவுக்கு ஓடி வந்தான். சுவரோரமாக முடங்கிக் கிடந்த சொறி நாய் ஒன்று, அவனைப் பார்த்து எழுந்தது. திடீரென்று அவனுள்ளே ஒரு எண்ணம்... ஒரு பயம்... அந்த நாய் அவன் கழுத்தைக் கெளவிப் பிடித்து, ரத்தத்தைச் சுவைத்துக் குடிப்பது போன்ற கற்பனை...

கழுத்தைக் கைகளால் மூடிக்கொண்டே, மெய்யப்பன் தன் அறைக்குள் ஓடி வந்தான். திபுதிபுவென்று திருடன் போல் ஓடி, உள்ளேபோய் தாளிட்டுக் கொண்டான். நாயை இப்போது அவனால் பார்க்க முடியவில்லையானாலும், அது அவன் வயிற்றைக் கிழித்துக் குடலை கெளவிக் கொண்டு, அவனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போவது போன்ற பேயுணர்வு... குடலே இடுப்பில் கட்டிய கயிறாக, நாயிழுத்த மனிதனாய், அவன் தெருத் தெருவாய் அலைந்து அலைக் கழிக்கப்பட்ட இரண்டு கால் மிருகமாய் போவது போன்ற நச்சுணர்வு.