பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 வெளிச்சத்தை நோக்கி...

கண்களைப் பொத்தி, அவன் விழுந்து விழுந்து எழுந்தான்.எழுந்து எழுந்து விழுந்தான்.

இறுதியில், இயற்கை கருணை செய்தது. தாக்கிய உணர்வுகளுக்குத் தளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். அவயவங்கள் அவற்றை உள்வாங்கி இருக்கவேண்டும். அவன் கண்கள் செருகின. உடம்பு பூமியை அழுத்திக் கீழே தள்ளுவதுபோல் கனத்தது. மெய்யப்பன் தரையில் குப்புறப் படுத்தான். வெளியுலகைப் பார்க்க விரும்பாதவன்போல், மூக்கு, தரையை முட்டப் படுத்தான். அதல பாதாளத்திற்கும், ஆகாயத்திற்குமாக மாறிமாறிப் போய்வந்த அவன் இறுதியில் செத்தவன் போல் மாறினான்...

12

காலையில் எட்டுமணிக்குக் கண்விழித்தான் மெய்யப்பன். ஒரு நிமிட நேரம், எந்தவித எண்ணவோட்டமும் இல்லாமல், மனம் தெளிந்த நீரோடைபோல இருந்தது. திடீரென்று, இரவில் அனுபவித்த உணர்வுகள், ஒரே சமயத்தல் போட்டி போட்டுக் கொண்டு, உள்ளத்திற்குள் பாய்வது போலிருந்தது. அப்படிப் பாய்ந்த ஒரு கணத்துள் தலை கனத்தது. நெற்றி புடைத்தது. கண்கள் அழுத்தின. காதுகளில் பேரிரைச்சல், உடம்பு முழுவதும் ஒரு குலுங்கு குலுங்கி, ஒவ்வொரு அவயவமும் தனித்தனியாக, தற்குறித்தனமாக ஆடுவது போலிருந்தது. உணர்வுகள், மனதுக்குக் கட்டுப்படாமலும், உறுப்புகள், மூளைக்குக் கட்டுப்படாமலும் இயங்குவதுபோல் காதிரைச்சல்... கண்ணெரிச்சல்... இடதுபுறமிருந்த இருதயப் பகுதியின் துடிப்பு...