பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 வெளிச்சத்தை நோக்கி...

அசுரத்தனமான ஒரு கற்பனை. நாயர் அவன் தலையைப் பிடித்துப் பாய்லர் அடுப்புக்குள் திணிக்கப் பார்க்கிறார். இன்னும் யாரோ இரண்டுபேர் அவனைத் தலைகீழாகத் தூக்கிப் பார்க்கிறார்கள். அடுப்புக்குள் திணிக்கப் பார்க்கிறார்கள்.

மெய்யப்பன் திரும்பி நடந்தான். திரும்பிப் பாராமல் நடந்தான். அவன் போவது புரியாமல், கடைக்காரர் சிறிது நேரம் அவன் புறமுதுகையே பார்த்தார். பிறகு, ஸ்பெஷலாக போட்ட அந்த குவளை தேநீரை யாரோ ஒரு தொழிலாளிக்கு முனங்கிக் கொண்டே கொடுத்தார்.

மெய்யப்பன் காம்பவுண்ட் கதவைத் தள்ளியபோது, சத்யா துடைப்பத்தோடு வந்து நின்றாள். துடைப் பத்தாலேயே அவள் தலையில் அடிப்பதுபோல் ஒரு அவமானச் சிந்தனை, அவளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தான். அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இரவு அவனைத் திட்டியதற்காகத் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தவள், இப்போது அவன் பார்க்கும் விதத்தைப் பார்த்துவிட்டு, கோபம் பொங்க, துடைப்பத்தின் அடிப்பாகத்தைத் தரையில் வைத்துத் தட்டிக்கொண்டே பெருக்கப்போனாள்.

மெய்யப்பனுக்கு திடீரென்று இன்னொரு பிரமை. இந்த சத்யா அசுரரூபியாகி அவனை, துடைப்பத்தைப் பிடிப்பது போல், தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, அவன் தலை முடியை வைத்தே தளத்தைப் பெருக்குவதுபோல் ஒரு பீதி. மெய்யப்பன் சத்யாவைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே அறைக்குள் ஓடினான். கதவைப் படாரென்று சாத்தினான். சாத்திய வேகத்தில் மறுபுறமாகத் திரும்பி, கட்டில் 'பாடையைப்' பார்த்தான். பாதாளத் தரையை நோக்கினான். இடிந்து விழப்போகும் மேல் கூரையை வெறிபிடிக்கப் பார்த்தான். பிறகு அறை மூலையில் அப்படியே சாய்ந்து, கால்களை விரித்துப் போட்டுக் கொண்டு, கைகளை குறுக்காக மடித்துக்