பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 81

கொண்டு, எதையோ பார்ப்பதுபோல், எதையும் பார்க்காமல், அப்படியே அண்ணாந்து இருந்தான். உள்ளத்துள் புகுந்த உணர்வுகளை உதற முடியவில்லை. இல்லாததை இருப்பதாக நினைப்பது தெரிந்தாலும், அவற்றை இல்லாமல் செய்ய இயலவில்லை.

ஒன்பது மணி ஆகியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு அவன் எழுந்தான். தாழ்ப்பாள் பாம்பாகச் சீறி அவனைக் கொத்த வருவது போன்ற பயம். சமாளித்துக் கொண்டு கதவைத் திறந்தான். குமார் வந்தான். மெளனமாக அவனையே பார்த்தான். பிறகு, ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டான்:

"டேய்... என்னடா... இப்டிப் பார்க்கிறே... நைட்ல தூங்கலியா..?"

மெய்யப்பன் நண்பனையே விக்கித்துப் பார்த்தான். அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அழப் போகிறவன்போல், கைகளை அவன் தோளில் போடப் போனான். அதற்குள் குமார் சாய்வு நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டு, "ஒன்கிட்ட சொல்லாமல்தான் ஊருக்குப் போவதாய் இருந்தேன். இரண்டு மாதம் பார்க்க முடியாதுன்னு தெரிந்ததும், மனசு கேக்கல... அதோட... நீ விம்புக்காக இருக்கிறவன் இல்லன்னு தெரியும்... ஏண்டா என்னை அப்படிப் பார்க்கிறே..?” என்றான்.

மெய்யப்பன், குமாரின் வாயையே பார்த்தான். அவன் தன் கழுத்தைக் கெளவிக் கடிப்பது போன்ற ஒரு எண்ணம். அந்த எண்ணத்தைப் பயமாக மாறாமல் எப்படியோ சமாளித்துக் கொண்டான். குமாரைப் பார்த்ததும் லேசாக ஆறுதல் ஏற்பட்டது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தவனின் கைகளைக் குனிந்து பற்றிக்கொண்டு, "டேய் குமார்... ஏதோ ஒரு மாய வலையில... மாட்டிக்கிட்டது மாதிரி தோணுதுடா... யாரோ என்னைக் கட்டிப்போட்டது மாதிரி தோணுதுடா..." என்றான்.

6