பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 வெளிச்சத்தை நோக்கி...

இன்றைய வாழ்க்கையில, தற்காப்புப் போராட்டத்துக்கே நேரம் போதல... பிறத்தியாரைப் பற்றி நமக்கென்ன வந்தது...? நான் வரட்டுமா... லெட்டர் போடுறேன். உங்க ஊர்லயே ஒனக்கும் ஒரு பெண் பார்க்கிறேன். தாலி கட்டத் தயாராய் இரு.‌.. தங்கம் வாங்குறதுக்கு காசைச் சேரு... நான் வறேண்டோ... ஒன்னை விட்டுப்போக மனம் வரலியேடா பாவி... கண்டபடி நினைக்காதே.... சாயங்காலத்துக்குள்ள சரியாகாட்டி, டாக்டரைப் பாரு... பார்த்தாலும், பார்க்காட்டாலும் சரியாயிடும்... ஓகே."

குமார் போய்விட்டான். மெய்யப்பன் எழுந்தான். அவசர அவசரமாகக் குளித்து முடித்தான். அலுவலகம் போனால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், ஆடையணிந்து, பூட்ஸ் போடப் போனான். எதேச்சையாகச் சுவரில் தொங்கிய மாதக் காலண்டரைப் பார்த்தான். நீருக்குள் இருக்கும் முதலை, வெளியே நிற்கும் யானையின் காலைப் பிடிப்பதைச் சித்தரிக்கும் படம். ரத்தத்துளிகள் தெறித்தது போல், நீரில் சிவப்பு நிறம். யானை தும்பிக்கையைத் தூக்கி, பரிதாபமாக அலறுவதுபோன்ற பாவனை. மெய்யப்பன் பூட்ஸ் கால்களையே வெறித்துப் பார்த்தான். அந்த பூட்ஸ்கள் இரண்டு முதலைகள் மாதிரியும், அவை அவன் கால்களைப் பிடித்துக் கெளவுவது போன்றும் ஒரு எண்ணம். திடீரென்று பூட்ஸ்களை கழற்றி, வீசியெறிந்தான். காலண்டரை எடுத்து, சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டான். பின்னர், அலுவலகம் போனால் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடன், செருப்பைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

'மெஸ்ஸுக்கு'ப் போகும் வழியில் குழந்தை ஒன்று தெருவில் அசுத்தம் செய்வதைப் பார்த்து, முகத்தைத் திருப்பிக் கொண்டே நடந்தான். 'மெஸ்ஸில்' கூட்டம் அதிகமாக இல்லை. அவனைப் பார்த்ததும், ஏற்கனவே உணவோடு எடுத்து வைத்த சாப்பாட்டுத் தட்டை, பையன், மேஜையில் வைத்தான். மெய்யப்பன் ஒரு கவளம் உணவை