பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 85


வாயில் போட்டபோது, திடீரென்று ஒரு அருவருப்பான எண்ணம். சாலையில் பார்த்த அந்தக் குழந்தையின் அசுத்தத்தையே தான் தின்பது போன்ற ஒரு உணர்வு.

மெய்யப்பன் நாற்காலியைப் பலவந்தமாகக் தள்ளிக் கொண்டே வாஷ்பேசின் அருகே வந்தபின் வாயில் இருந்த சாதத்தைத் துப்பி, வாயைக் கழுவிவிட்டு, வெளியே வந்தான்.

அலுவலகத்திற்கு அவன் வந்தபோது எல்லாம் அடியோடு மாறியிருப்பது போன்ற எண்ணம். விமலா ஒய்யாரமாகச் சிரித்தபடி, வாணியைப் பார்த்து "இந்த புடவை டிசைன் நல்லா இருக்குதா" என்று கேட்கிறாள். வாணி "ஏ ஒன்” என்கிறாள். அந்த 'ஏ' பெண்கள்மீது அவனுக்கு இப்போது கோபம் வரவில்லை. தாபம் தோன்றவில்லை. “வணக்கம் தலைவரே" என்று வழக்கமாகச் சொன்ன பியூனுக்கு, பதில் வணக்கம் சொல்லத் தோன்றவில்லை.

தன்பாட்டுக்கு ஒரு ரிஜிஸ்டரை எடுத்தான். நேற்று முடிக்காமல் வைத்த 'ஆடிட் அப்ஜெக்ஷன் ரிஜிஸ்டர்' இறுதி ஆட்சேபத்திற்குப் பதிலெழுதுவதற்காப் பேப்பரை எடுத்தான். திடீரென்று ஒரு எண்ணம். மானேஜரை, அயோக்கியன் என்றும், வாணியை விபச்சாரி என்றும், விமலாவை வேசி என்றும் எழுதவேண்டும் என்பது போன்ற ஒரு ஆத்திர உணர்வு.

ரிஜிஸ்டரை மூடிவிட்டு, கம்பெனி சம்பந்தப்பட்ட ஒரு கடிதத்தை டைப் அடிக்கப் போனான். உடனே, டைப்ரைட்டிங் மறந்துபோனது போன்ற ஒரு பீதி, ஆங்கில எழுத்துக்கள் தெரியாமல் போனது போன்ற எண்ணம். உணர்வுகளுக்குத் தீனியாகி, அவன் டைப்ரைட்டர் மிஷினையே உற்றுப் பார்த்தான். உறுமிக் கொண்டு பார்த்தான். அந்த மிஷினுக்கு மேல் பகுதியில் காகிதத்தை வெட்டுவதற்காகக் கத்திமேல் இருந்த பகுதியைத் தற்செயலாக எடுத்துவிட்டான். அந்தக் கருவி தன் முன் தொண்டையில் குத்தி, பின்பக்கம் ஊடுருவுவது போன்ற பிரமை,