பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 வெளிச்சத்தை நோக்கி...


ஒன்றும் புரியாதவனாய் விமலாவைப் பார்த்தான். அவளை, தான் கடித்து, ரத்தத்தைக் குடிப்பது போன்ற அரக்க உணர்வு. அவனுக்கு அலுலவகம், பேய்க் காடாய் தெரிந்தது. இருந்தவற்றை இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, வாணியை நெருங்கி, "மானேஜர்கிட்ட நான் அரைநாள் லீவுன்னு சொல்லுங்க மேடம்..." என்று சொல்லிவிட்டு, தலைவிரி கோலமாக வெளியேறினான்.

மெய்யப்பன் நடந்துகொண்டே இருந்தான். எழும்பூர் வந்து, புரசைவாக்கம் போய், மூர்மார்க்கெட்டிற்கு நடந்து, பாரிமுனைக்குத் தாவி, ராயபுரம் அலைந்து, மீண்டும் பாரிமுனை வழியாக, கடற்கரை ஓரமாய் வானொலி நிலையம் வரை நடந்து, சிறிது இளைப்பாறுபவன் போல் நின்றுவிட்டு, பிறகு அடையாறுக்குப் போய், அங்கிருந்து சைதாப்பேட்டை வந்து, மவுண்ட்ரோட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்தான்.

உள்ளத்தில் தாவிய உணர்வுகளை உலுக்கி எறிவது போல்ஓடிப்பார்த்தான். உடலெங்கும் பூச்சிகளைப் புரண்டு படுத்துக் கொல்லும் எருமை மாடுபோல், அவன் அங்குமிங்குமாய் சுருண்டு சுருண்டு நடந்தான்.

மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே என்று சொன்ன புத்திமதிபோல், அவன் நடக்க நடக்க, நாசகார எண்ணங்களும் கூடவே நடந்தன. உடம்பை ஒழிக்காமல் உணர்வை ஒழிக்க முடியாதுபோல் தோன்றியது. எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, இரவு பத்து மணியளவில் வீட்டுக்கு வந்தான்.

கட்டிலை எட்டி உதைத்தான். பாதாளத் தரை தெரிந்தது. தரையைக் காலால் உதைத்தான். கட்டில் பாடையைக் காட்டியது. கட்டிலைப் பார்க்கப் பயந்தவனாய், கூரையைப் பார்த்தான். விழப்போனது. ஒன்றைவிட்டு இன்னொன்றைப் பார்த்தால், பார்ப்பது பயமுறுத்தியது. அங்குள்ள எல்லாப் பொருட்களும், அவனை மாறிமாறிப் பயமுறுத்தின.