பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துவக்குகிறார். இதில் வெற்றியும் பெறுகிறார். மனயியல் பற்றி பல மனிதாபிமானக் கட்டுரைகளை இவர் சிறப்பாக எழுதுவதற்குக் காரணம், "இரட்டை சிகிச்சை முறை"யை ஆதாரமாக வைத்திருப்பது தான் காரணம் என்று கருதுகிறேன். இதனால்தான் பதிப்பகத் துறையில் நல்ல நூல்களை மட்டுமே வெளியிடும் நாடறிந்த நிறுவனமான வானதிப் பதிப்பகம், இவரது "குழந்தைகள் மனநலம்" என்ற நூலை மிகச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலில் வரும் மனயியல் நுட்பங்கள், விஞ்ஞான ரீதியில் இருக்கவேண்டும் என்பதற்காக புகழ்பெற்ற மொழி பெயர்ப்பாளரான திருமதி. சரஸ்வதி ராம்நாத் அவர்களின் மகனும், பிரபலமான மனநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர். ரகுராமனுடன் பலதடவை உரையாடி குறிப்புக்களை எடுத்துக் கொண்டேன். நான் பெங்களூரில் பணியாற்றியதும், அவர் அங்குள்ள "நிமான்ஸ்” என்ற புகழ்பெற்ற மனநோய் மருத்துவமனையில் பணியாற்றியதும் வசதியாய்ப் போயிற்று. சலிக்காமல் பல தகவல்களை எனக்குத் தந்துதவினர். இதனால்தான் இந்த நாவலில் வரும் மெய்யப்பனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கு, அவரது பெயரையே சூட்டினேன்.

இந்த நாவலுக்கு அருமையான பதிப்புரை வழங்கிய திருவரசு புத்தக நிலையத்திற்கு நான் பெரிதும் நன்றியுடையேன். இந்த நாவலை வெளியிட வேண்டுமென்று சொன்ன மறுநாளே இதை அச்சுக்கு எடுத்துக் கொண்டார்கள். பெரியவர் திருநாவுக்கரசு அவர்கள், எடுத்த காரியம் எதிலும் துல்லியமாகவும் துளக்கமாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர். அவரது இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில், அவரது புதல்வர்களான அருமைத் தம்பிகள் ராமுவும் சோமுவும் பணியாற்றுவது பதிப்பகத் துறைக்கே ஒரு வரப்பிரசாதமாகும். இந்த வகையில், நான் மட்டுமல்ல. இந்த நாவலும் கொடுத்து வைத்தது என்று கருதுகிறேன். பெரியவர் திருநாவுக்கரசு அவர்களின் இலக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் பல படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இந்த நாவல் தங்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி வாசகப் பெருமக்கள் ஒரு வரி எழுதிப்போட்டால் நன்றியுடையேன். சு. சமுத்திரம்