பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 வெளிச்சத்தை நோக்கி...


அலுவலக விஷயமாகத் தன் அறைக்கு வந்த அவனிடம் மானேஜர், தனக்குப் பரிச்சயமில்லாத கண்ணியமான குரலில், "என்ன மிஸ்டர். மெய்யப்பன், நீங்க லீவு கேட்டால்,நான் கொடுக்கவா மாட்டேன்...." என்றுதான் பீடிகை போட்டார். மெய்யப்பன் பரபரத்து விழித்தபடித் தலை கவிழ்ந்து நின்றதைக்கூட நெஞ்சழுத்தமாக நினைத்தபடி "ஒங்களைத்தான்... மிஸ்டர் மெய்யப்பன்..." என்று இழுத்தார். ஆனால், மெய்யப்பனோ திடீரென்று கைகளிரண்டையும் தலைக்குமேல் தூக்கினான். அப்போதும் அவன் தன்னை அடிக்கப் போகிறான் என்றுதான் முகத்தைத் தன் கரங்களால் அனிச்சையாக மறைக்கப் போனார்.

ஆனால், மெய்யப்பனோ, அவரை நோக்கிக் கும்பிட்ட படியே, "இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்... என்னை மன்னிச்சுடுங்க ஸார்..." என்று சொன்னபோது, பயல் கிண்டல் செய்கிறானோ என்று சிறிது விழிப்படைந்து பார்த்தார். அவன், "நான் ஒங்க விஷயத்துல தலையிட்டது தப்பு ஸார்... இனிமேல் தலையிட மாட்டேன் ஸார்... தலையிட்டது தப்பு ஸார்...” என்று சொல்லிக் கண்ணீர் விட்டபோதுதான் மானேஜருக்கும் கண்ணில் நீர் வந்தது. ஆனந்த நீர். "இனிமேல் சொல்லாமல் கொள்ளாமல் லீவுபோட்டே, ஒன்னை ஒரேயடியாய் தொலைத்துப்புடுவேன்” என்று உறுமிக் கொண்டு அவர் நடித்தபோது, மெய்யப்பன் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு மன்றாடினான். இப்போதெல்லாம் மானேஜர் நடிக்கவில்லை. நிஜமாக வெளியே வந்து நாலு பேர் முன்னிலையில் மிரட்டுகிறார். அன்றும் அப்படித்தான்.

மெய்யப்பன் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அக்கெளண்டண்ட் பாஷ்யம், விமலாவிடம் ஈடுபாடாகப் பேசிக் கொண்டிருந்தார். நாட்டு நடப்புக்களைப் பற்றி தனக்குத் தெரிந்த வகையில் பேசிவிட்டு, "ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான்... பர்மாவை அவன் பிடித்தவுடனே