பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 91


என்ன பண்ணினான் தெரியுமா....? கலாட்டா பண்ணுன வங்களை நடுரோட்டுல நிறுத்தி... எதிர் எதிர் திசையில நின்ன இரண்டு கார்லயும்.... ரெண்டு காலையும் இழுத்துக் கட்டி காருங்களை... அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் ஓட்டினான். ரெண்டு காலும் தலையோடு சேர்ந்து பிய்ந்து, ஒரே கண்றாவி... இவங்களுக்கு அவன்தான் லாயக்கு" என்றார்,

திடீரென்று, மெய்யப்பனுக்கு ஒரு பயம்,அவனை பர்மா ரோட்டில் அல்ல... இதே இந்த நுங்கம்பாக்கம் ரோட்டில் நிறுத்தி, இரண்டு கால்களையும் இரண்டு கார்களில் கட்டி, இதோ ஸ்டார்ட் செய்யப்போகிறார்கள்... இதோ... இதோ...

மெய்யப்பன் எழுதிய ரிஜிஸ்டரைத் தொப்பென்று போட்டுவிட்டு எழுந்தான். யாரிடமாவது, தன் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லி, புகலிடம் கேட்க நினைத்தான். அக்கெளண்டண்ட் பாஷ்யத்தையே கேட்கலாமே.... பர்மாவில் இருந்த மனிதர்... ராசிபலன் தெரிந்தவர்... பகவத் கீதையைக் கரைத்துக் குடித்தவர்... சிலர் தத்துவங்களைப் பேசுவார்கள். ஆனால், அவர் பேசினாலோ, தத்துவம் தவழும்... ஐம்பது வயதைத் தாண்டிய அனுபவஸ்தர் கேட்டுப் பார்க்கலாம்.

விமலாவிடம் இப்போது 'செக்ஸ்' விவகாரத்தைப் பேசிக் கொண்டிருந்த அந்தக் கிழவரைப் பார்த்து, "ஒங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்... வெளியில் வாறீங்களா..." என்றான். அவர் வருவார் என்று எதிர்பார்த்து, எழுந்து வெளிக்கதவு வரை போய்விட்டான். ஆனால், பாஷ்யம், "இவன்வேற கொஞ்சம் பொறுப்பா..." என்று சொல்லிக் கொண்டே, விமலாவிடம் வாய் பிளந்து பேசிக் கொண்டிருந்தார். மெய்யப்பன் சோர்வாகத் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். கால்கள் இரண்டாகப் பிரிகின்றன... தலையோடு சேர்ந்து... ரத்தம் பீறிடுகிறது... குடல் அறுகிறது... எலும்புகள் முறிகின்றன...