பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 வெளிச்சத்தை நோக்கி...

பாஷ்யம் சொல்லும் "ஏ ஜோக்குகளை, மாலையில், ரவியிடம் சொல்லிச் சொல்லி சிரிக்கவேண்டும் என்ற ஆசையில், விமலா ஆர்வத்துடன் கேட்டாள். அதற்குள் ரவியே டெலிபோன் செய்துவிட்டான். அவள் கால்மணி நேரம் டெலிபோனை விடவில்லை. காதல் வார்த்தை களுக்குப் பதிலாக... கம்பெனி வார்த்தைகள்தான் அவள் வாயில் வந்தன. காதல் தேர்வைவிட, கம்பெனித் தேர்வு முக்கியம் என்பதுபோல்.

பாஷ்யம் அவள் வருவது வரைக்கும் பொறுமையாக இருந்து பார்த்தார். அவள் வந்ததும், விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் துவக்கப் போனார். விமலா, ரவியின் டெலிபோன் பேச்சு கொடுத்த காதல் மயக்கத்தில் இருந்தாளோ... அல்லது புதிய கம்பெனியில் வேலை அவ்வளவு சீக்கிரமாகக் கிடைக்காது என்று ரவி சொன்னானோ... என்ன இழவோ... அவள் 'மூடில்' இல்லை. பேசப்போன பாஷ்யத்தைப் பார்த்து, "இந்த மாதிரி பேச்செல்லாம்... எங்கிட்டே வச்சுக்காதிங்க... அதுக்குன்னே இருக்கவங்ககிட்ட பினாத்துங்க..." என்று சொல்லிவிட்டு, மானேஜரின் அறையைப் பார்த்தாள். வாணி இன்னும் 'டிக்டேஷன்' எடுத்து முடிக்கவில்லை. விமலா புடவைத் தலைப்பைத் தோளோடு சேர்த்து மூடிக் கொண்டாள். அடேயப்பா, அவள் வாணி மாதிரி இல்லையாம்...

பாஷ்யத்திற்கு பால்ய வயது போய்விட்டது. மெய்யப்பனைப் பார்த்து "போகலாமா... வெத்திலை புகையிலை வாங்கித் தருவியா...” என்றார் வெறும் வாயைமென்று அசந்தவர்போல. பழைய மெய்யப்பனாக இருந்தால், "போங்க ஸார். இப்போ மட்டும் நானா..." என்றிருப்பான். ஆனால், அவன் புதிய மெய்யப்பன். நீருக்குள் மூழ்குபவன், துரும்பையும் தூணாக நினைத்துப் பற்றுவது போன்ற அபலைப் பையன்.