பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 வெளிச்சத்தை நோக்கி…


ஏஜெண்ட்கிட்ட ஆர். ஆரை செக் பண்ணிட்டு, அப்படியே குட்ஸ்களையும் செக் பண்ணிட்டு வந்துடு... டேமேஜ் அயிட்டம் இருந்தால் போன் பண்ணு... நீ பாட்டுக்கு பேக்கு மாதிரி இருக்காமல்... டேமேஜ் அயிட்டங்களை நல்லா பாரு... 'குயிக்காய்' போப்பா... ஒன்னத்தாம்பா... நான் என்ன இங்லீஸ்லயா பேசுறேன், ஒனக்கு விளங்காமல் போக..." என்று சொல்லிவிட்டு, அறைக்குள் - வாணி இருந்த அறைக்குள், 'குயிக்காய்' போய்விட்டார். அவளுக்குக் கொடுக்க வேண்டிய 'டிக்டேஷன்' இன்னும் முடியவில்லை.

மெய்யப்பன் ரயில் நிலையத்திற்கு வந்தான். ரயில் வண்டிகளைப் பார்த்ததும், அவன் கால்களே தண்டவாளம் மாதிரியும், அதில் ரயில்கள் ஊர்வது போலவும் ஒரு பயக் கற்பனை. பல்லவன் பஸ்ஸில் அடிபட்டு, ரத்தம் தோய்ந்த துணியில் மறைக்கப்பட்டிருக்கும் ஒரு முன்னாள் மனித உருவைப் பார்த்ததும், தானே அப்படிக் கிடப்பது போன்ற பிரமை.... முன் சக்கரம் வயிற்றில் ஏறி.... குடலை வெளிக்கொண்டு வந்திருப்பது போன்ற பயம்... அத்தனை உணர்வுகளையும் விழுங்கிக் கொண்டு, கொடுத்த வேலையை எப்படியோ நிறைவேற்றிவிட்டு அலுவலகம் வந்தான்.

அங்கே பாஷ்யம் அலுவலக சகாக்களிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், விமலாவும் இருக்கிறாள். வாணி மட்டும் ஒப்புக்குச் சிரிப்பதுபோல் புன்னகை செய்தாலும், முகஞ் சுழித்துக் காணப்பட்டாள். மெய்யப்பனைப் பார்த்த பாஷ்யம், புகையிலையை எடுக்கும் சாக்கில் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார். விமலா, தோளைக் குலுக்கி, முகத்தைச் சுழிக்கிறாள். டைப்பிஸ்ட் பெண்கள் கனகமும், மீனாட்சியும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் கண் வலையில் விழுந்த சந்தானமும், சற்குணபாண்டியனும், அவனைப் பார்த்துவிட்டு, பிறகு ஒருத்தன் காதலியைப் பார்த்து இன்னொருவன் கண்ணடிக்கிறான். பியூன்