பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

95

முனுசாமி, வெளிப்படையாகவே, “என்ன தலைவரே... ஒங்களுக்கு என்னவெல்லாமோ தோணுதாம். தோணப்படாது.... அப்புறம் இந்த நாற்காலியைப் பார்த்தால், வெளி நாட்ல மரண தண்டனைக்கு வச்சுருக்கிற எலெக்டிரிக் சேர் மாதிரி தெரியும்... அதுக்கு இன்னும் நாளாகுமாம்... சும்மா கண்டதை நினைக்காதே தலைவரே... பாஷ்யம் சாரை மாதுரி... தெனமும் நைட்ல தண்ணிபோடு... சரியாப்பூடும்... இன்னிக்கு வேணுமுன்னா... என்னோட வாரீயா...?” என்று அட்டகாசமாகப் பேசினான்.

எல்லோரும் முனுசாமி சொன்னதையும், அவனால் சொல்லப்பட்டவனையும், ரசிப்பதுபோல் பார்த்தபோது, வாணி மட்டும், “முனுசாமி... நீங்க யாரையும் இப்படி புண்படுத்தப்படாது...” என்றாள்.

மெய்யப்பன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். எப்படி நடிக்கிறாள்... என்னிடம் நடித்து, மானேஜரிடம் நடித்து, இப்போது எல்லோரிடமும் நடிக்கிறாள்... என்னை இந்த நிலைக்கு ஆக்கியவளே இந்தப் பழிகாரிதான்.

அவன் பயங்கரமாகக் கத்தினான். “நான் நனையுறேன்னு எந்த ஓநாயும் கவலைப்படவேண்டாம்.”

அனைவரும் நிசப்தமாயினர். வாணியின் முகம் சிவப்பதற்குப் பதிலாக வெளுத்தது. விமலா, “ஒங்களுக்கு நல்லா வேணும்... யாராவது கிறுக்கனுக்கு வக்காலத்து வாங்குவாங்களா...” என்றாள் மெதுவான குரலில்,

மெய்யப்பன், தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.பியூன் முனுசாமி சொன்னது போல , அவன் உட்கார்ந்திருப்பது மின்சார நாற்காலி போலவும், அவன் எரிக்கப்படப் போவது போலவும், ஒரு எரிச்சல் எண்ணம். கால்கள் இரண்டிலும் தீப்பற்றிக் கொண்டது போன்ற உணர்வு. தலை, நெருப்புத் துண்டமாய் ஆனது போன்ற அசுர