பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இருசமய விளக்கம்


என்ற புதல்வர் மூவர் பிறந்திருந்தனர். மூன்றாம் புதல்வரான திருமலையப்பரே பின்னால் அரிதாசர் என்ற புகழ்பெற்ற நூலாசிரியர். இவருக்குக் கிருட்டிணன் என்ற தாசியத் திருநாமமும் உண்டு. நாகலாபுரம் செப்பேடு ஒன்று இந்தப் பெயரைக் குறிப்பிட்டு, இவர் அவ்வூர்த் திருக்கோயில் கைங்கரியங்களைச் செய்து வந்ததால் அரிதாசர் என்று வழங்கப்பெற்றார் என்று கூறுகின்றது.

அக்காலத்தில் விசய நகரத்தின் சிறப்புமிக்க மன்னராய் விளங்கியவர் கிருட்டின தேவராயர். அவர் கலிங்க தேசத்தைக் கடகம் (இன்றைய கட்டாக் என்ற அதன் தலைநகரிலிருந்து ஆட்சி புரிந்த கசபதி அரசனான பிரதாப ருத்திரனை அடக்க வேண்டி அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று (1520) அவனை வென்று அங்கு செயத்தம்பம் நாட்டினார். நாட்டப்பெற்ற இடம் விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள சிம்மாசலம் என்று பெயர் வழங்குகின்ற சிங்காத்திரி ஆகும். கிருட்டின தேவராயர் சிம்மாசலத்திடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். வெற்றி கொண்டு செயத்தம்பம் நாட்டிய இராயர் தெற்கு நோக்கி வந்தபோது அரிதை என்ற அரிகண்டபுரத்தில் அரிதாசரால் கட்டப்பெற்ற கருமானிக்கவண்னர்-வேதவல்லி நாச்சியார் ஆலயத்தையும் வணங்கி அங்கு ஆராதனைக்கு வேண்டிய நிபந்தங்களையும் கொடுத்தார்.

இராயரோ தெலுங்கு மொழியில் கவிஞர். அவர் பாடிய ஆமுக்தமால்யதா[1]' என்ற நூலிலும் அவரது அவைக்கவிஞர் பெத்தண்ணா பாடிய காவியத்திலும் செயத்தம்பம் நாட்டிய ஊர் பொட்டுனூர் என்று சொல்லப் பெறுகின்றது. இதை இராயர் தில்லை நடராசப் பெருமானை வணங்கி அங்கு வடக்குக் கோபுரம் கட்டி வைத்தபோது பொறிக்கப்பெற்ற கல்வெட்டு உணர்த்துகின்றது. இந்த கோபுரம் இராசாதிராச பரமேசுவரன் ஸ்ரீ வீரப்பிரதாய கிருட்டின தேவ மகாதர்மமாக சிம்மாத்திரி பொட்டுனுாருக்கு எழுந்தருளிச்


  1. 30 சூடிக்கொடுத்தவள் வரலாறு. இது தெலுங்கில் கிருட்டிண தேவராயர் செய்தது.இதைப் பன்மொழிப்புலவர் மு.கு. ஜகந்நாதராஜா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து ஐதரபாத் தெலுங்குப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தெலுங்கு மூலமும் தமிழ் எழுத்தில் தரப் பெற்றுள்ளது.

87