பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


என்பது காண்க. வடமலையார் அமைச்சராய் மிக்க செல்வாக்கோடு விளங்கினமையால், அக்காலத்தில் அரசர்மேல் ஆணையிட்டு மக்கள் சொல்வதுபோல இவர் பேராலும் ஆணையிட்டுச் சொல்லும் வழக்கம் இருந்தது என்பதைத் தத்துவப்பிரகாசர் வரலாற்றில் வரும் குறிப்பால் அறிகின்றோம்.

மருவுபுகழ்க் கிட்ண மகராசர் ஆணை
அரிய வடமலையார் ஆணை - திருவாரூர்ப்
பாகற் கொடியறுப்பார் பாதத் திருவானை,
தாயாக் கொடியிறக்கா தே

என்ற பாடலைத் தத்துவப்பிரகாசர் பாடி திருவாரூர்ச் சிவாலயத்தில் நடந்த கேடுகளைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் குறிப்பிட்டவாறு மூன்று ஆணையுமிட்டு, கொடியிறக்காதவாறு தகைந்தார் என்பதைத் தமிழ் நாவலர் சரிதையால் அறிய முடிகிறது (225); பாகற்கொடியறுப்பார், தியாகராசப் பெருமான். திருக்கழுக்குன்றத்துச் சாசனமொன்றும் வடமலையாரைக் குறிப்பிடுவதோடு இவர்கள் பரம்பரையையும் கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் குன்றுவர்த்தனக் கோட்டத்து வடகூவத்துள்ள அரிகண்டபுரத்து ஹரிவாசபுரமான நாகலாபுரம் என்ற ஊரினராகிய ஆவினி களப்பாளர் திருவேங்கடமுடையார் என்பவரின் புத்திரர்களை வடமலையண்ணகள், தெய்வங்கள் பெருமாள், திருமலையப்பர் என்ற மூவர் தங்கள் தாயார் பெருமாள் தேவிச்சியார் புண்ணியமாகவும் அரசர் கிருட்டிணதேவராயர் தர்மமாகவும், 'குறுமுகை என்ற ஊரைக் கோயிலுக்கு உதவினர்’ என்று கூறுகிறது. எனவே, இச்சாசனக் குறிப்புகளாலும், பாடல்களாலும் அரிதாசருடைய பரம்பரையும் வரலாறும் நன்கு தெளிவாகின்றன. இவர் சிறந்த வேளாளர் மரபில் வந்தவர் என்பதும், அரசியலில் பெரும் பதவி வகித்த வடமலையாரின் இளவல் என்பதும், கிருட்டிணதேவராயரால் பெரிதும் கெளரவிக்கப் பெற்றார் என்பதும் அறிய முடிகின்றது.

இரு சமய விளக்கம்: அரிதாசர் பாடிய நூல் இரு சமய விளக்கம்’ எனப் பெயர் பெறும். சைவம், வைணவம் என்ற இரு மயங்களையும் விளக்குவது என்று நூல் பெயர் குறிப்பிட்டபோதிலும்,

90