பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இருசமய விளக்கம்


 இது சைவ சமயக் கதைகளை மறுத்து வைணவத்தைச் சொல்லி வந்த நூலேயாகும். சைவ சமயக் கருத்து வேற்றுமைகளும் ஒரளவு சிறு சிறு பூசல்களும் அக்காலத்து இருந்தமை உண்மையே. 13-ஆம் நூற்றாண்டில் சிவஞான சித்தியார் செய்த அருணந்தி சிவாச்சாரியர் மற்றையோர் கருத்துகளை எடுத்துக் கூறி கண்டிக்கும் பகுதியாகிய 'பரபக்கம்’ (பிற்பகுதி) என்ற பகுதியில் உலகாயதன் தொடங்கி நிரீச்சுர சாங்கியன் ஈறாகப் பதின்மூன்று சமயவாதிகளின் கருத்துகளை விளக்கமாக எடுத்துக்கூறி, சித்தாந்தபரமாக அவற்றுக்கு மறுதலை தெரிவிக்கின்றார், பதினான்காக பாஞ்சராத்திரி மதத்தை (வைணவத்தை)க் கூறும்போது, அவர் புராணக் கதைகளைக் கூறுகிறாரேயன்றி வைணவ சமயக் கருத்துகளை எடுத்துச் சொல்லி மறுக்கவில்லை. கி.பி.1100க்குப் பின் வைணவ சமயம் மிகுதியான அளவில் வளர்ந்தது. பெருத்த மதமாற்றம் செய்தது; சமயத் துறையில் பெரு நூல்கள் யாவும் வடமொழியிலும் மணிப்பிரவாளத்திலும் செய்தது. செய்தோர் அனைவரும் (சிறு சிறு நூல்கள் செய்த ஒரிருவர் நீங்கலாக) பார்ப்பனரே. அவர்களுள் தமிழ்த்துறைக்கு வந்தவர்கள் இலர். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரிதாசர் குலத்தால் வேளாளர். திருமால் பக்தி நிறைந்தவர். சமயத் தத்துவமாக வடமொழியிலோ மணிப்பிரவாளத்திலோ நூல் செய்வதை விட்டு இவர் சைவர்களிடம் அதிகமாகப் பரவியிருந்த சிவஞான சித்தியார் பரபக்கத்தில் பாஞ்ச ராத்திரி மத மறுதலையாகக் கூறியவற்றை மனத்துட்கொண்டு சில புராணக் கருத்துகளையெல்லாம் மறுத்து, திருமால் பரமாக நூல் செய்ய முனைந்தார். பாஞ்சராத்திரி மதம், மறுதலை என்ற இரு பகுதிகளும் 731 பாடல்கள் கொண்டவை. இதனை மறுத்து, திருமால் சமயத்தைக் கதைகள் மூலம் நிலைநாட்ட எண்ணியவர் இதுபற்றி இரண்டாயிரத்துக்கு அதிகமான பாடல்களைப் பாடிவிட்டார்.


33 சுபக்கம் என்ற முற்பகுதி சைவ சமயத் தத்துவங்களை விளக்குவது.

91