பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இருசமயவிளக்கம்


சொல்லியே விளிக்கின்றனர். அரும்பிய கொங்கை நல்லாய், திங்கள் நேர் முகத்துச் சிவாகமவல்லிகேள், ஏலவார் குழலாகமப் பெண்ணே, கங்குநிறப் பொங்குகுழற் கலகவிழிச் சிலைநுதலாகமப் பூங்கோதாய், வாளொன்று கண்ணாரணவல்லி, அன்னநடையாய், பஞ்சழுத்து மெல்லடியாய், தாமஞ்சேர் கருங்குழலாய், இக்குமொழியாய், தாமமணியும் கருங்குழற் கோதாய், என்றுள்ள தொடர்களைக் கண்டு மகிழலாம்.

வேதம் 4, வேதாந்தம் 32, சாத்துவிக தர்மசாத்திரம் 6, இராசத தரும சாத்திரம் 6, தாமத தரும சாத்திரம் 6, உபபுராணம் 18, உபஸ்மிருதி 18, சங்கிதை 108,நூல் பாஞ்சராத்திரம் வைகானசம் என 2. இராகவ காதை பாரத காதை, பரதம், வாகடம், சோதிடம், தரிசனம் 6, மதம் 6, சமயம் 6, சைவாகமம் 28, பிற சாத்திரங்கள் என நூற் பெயர்கள் இங்கு மிக விரிவாய்ச் சொல்லியிருப்பதைக் காணலாம்.

இரண்டாம் காண்டமாகிய பூர்வ காண்டம் என்பது ஏழு படலமுடையது. முதலாவது உலக வழக்கப் படலத்தில் சைவ நாயன்மார் அறுபத்து மூவரானால் வைணவத்தில் ஆழ்வார் பதின்மருடன் எழுநூற்று எழுபதின்மர் உள்ளனர் என்கின்றாள். ஊரின் மேற்கில் திருமால் ஆலயம் இருப்பதை ஆகமவல்லி சுட்டிக்காட்ட அதற்கு மற்றவள் அநேக சிற்பசாத்திரச் சான்றுகளைக் காட்டி அரன் திருமால் கோயிலுக்குப் பரிவார தேவதை என்பதை அரிவாசபுரத்திலும் காணலாம் என்கிறாள்.இரண்டாம் படலம் அண்ணாமலை ஆழிமலை என்று கூறுவர். மூன்றாவது சங்கரனுக்குப் பல முனிவர் சாபம் சூழ்ந்தது என்றும், நான்காவது தக்கன் யாக அழிவும், ஐந்தாவது சர்வசங்காரப் பொருள் அரியே என்றும் கூறுகின்றன. ஆறாவது 'வரபாலனப் படலம்’ என்பது காசியைக் காபாலிக்குத் திருமால் கொடுத்தார் என்பது முதலான கதைகளைச் சொல்வது. ஏழாவது படலம் திருநீறு, உருத்திராக்கம், சிவபூசை முதலியவற்றின் சிறப்பை ஆகமவல்லி கூறுவதாக நிறைவு பெறுகின்றது.

மூன்றாவது உத்தர காண்டத்தின் இரு படலங்கள் மேற்கூறப் பெற்ற அனைத்தையும் மறுக்கின்றன. அடுத்த இரு படலங்களும் விஷ்ணு பூசையே பூசை என்று புகன்று சிவ பூசையைக் கண்டிக்கின்றன.

97