பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவர்தம் இல்லங்களில் கண்ணீர்க் கடலில் மூழ்கியிருக்கும் காட்சி நெஞ்சை உருக்கியது. நூற்றுக்கணக்கான மாணவர் அழுத கண்ணீருடன் வந்து போன காட்சி கல் நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. (9.12.2002) காலை 9.30 மணிக்கு அண்ணா நகர் மின்சார மயானத்தில் ஈமச் சடங்கும் நிறைவு பெற்றது.

இங்ஙனம் பல்வேறு வகையில் தொண்டாற்றி நிறை வாழ்வு வாழ்ந்த பெருமகனாருக்கு - வைணவ சீலருக்கு - ‘வைணவ புராணங்கள்’ என்ற இந்த நூலை அன்புப் படையலாக்கி என் மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்திக் கொள்கின்றேன்.

என்னை 87 அகவை வரை இவ்வுலகில் நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் வாழ வைத்து இந்நாள் வரை கண்ணொளி கெடாமல் படிக்கவும், எழுதவும் வாய்ப்புகள் நல்கி என் இதயத்தில் என்றும் நிலையாக எழுந்தருளியிருக்கும் வேங்கடம் மேய விளக்கிற்குப் பெரிய பிராட்டியின் மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள்.

இடிக்குரல் யானை வெண்கோடு
இறுத்தவன் இணைப்பொற் றாளின்
கடித்துணர் புணையாக் கைகள்
கையறு கைக ளாமால்;
பொடித்தசெங் கதிர்போற் காந்தி
பொழிமணிச் சூட்ட ராவின்
நடித்தவன் நாமம் பாடா
நாவழங் காத நாவே[1]

- செவ்வைச் சூடுவார்

‘வேங்கடம்’
AD-13, அண்ணா நகர்,

சென்னை - 600 040.

- ந. சுப்பு ரெட்டியார்

  1. இதிகாசபாகவதம்

- xiii -