பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைணவ புராணங்கள்

தவறாமல் குறிப்பிடப்பெறும். நரக வகைகள், நரகத் துன்பங்கள் மிகுதியாயிருக்கும். இங்கு பகுத்தறிவிற்கு இடம் இல்லை. பார்த்து அநுபவிக்காத பலவற்றை நம்பித்தான் அன்றாட வாழ்க்கையில் ஏற்கின்றோம். அறிவியலிலும் மருத்துவத்திலும் இப்படி எத்தனையோ உள்ளனவே! இவர்களும் மருத்துவம் செய்கின்றனர். துன்பம் வேண்டாம் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஆகவே, நெறி பிறழ்ந்தால் துன்பம் என்று சொல்லி அச்சுறுத்தியே ஒழுக்கத்தை நிலை நாட்டப் பார்க்கின்றனர். அன்றைய சூழ்நிலைக்கு இது பொருந்துவதேயாகும். 'அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது அன்றைய நம்பிக்கை. எனவே, புராணங்களின் இந்த இயல்பைப் பழிப்பது நம்மை நாமே பழிப்பதாகும்.

(4) தெய்வத்தை வேண்டுதல் என்பது அன்றிருந்த ஓர்இயற்கை நியதி. இன்று மனிதனைத் தெய்வமாக வேண்டவில்லையா? எனவே தோத்திரப் பாடல்கள் நூலெங்கும் மிகுந்து காணப்பெறும். இவற்றை மனப்பாடம் செய்து பொது மக்கள் இறைவனிடம் ஓதலாம் என்றுகூட ஆசிரியர்கள் சொல்லியிருப்பார்கள். 'அருளாளதாசர் பாகவதம்' போன்ற நூல்களில் தோத்திரப் பாடல்களே மிகவும் அதிகம். (முந்நூறுக்கும் மேல்) கவச நூல்களும் அதிகமாய் எழுந்துள்ளன. இவற்றின் ஒரு சிறப்பான நோக்கம் சூழ்ந்துள்ள கோளாறுகளை மறந்து மனிதனுக்கு ஆறுதலும் சாந்தியும் அளிப்பதாகும். இவை புராணம் என்ற நிலையையொட்டி எழுந்த சிறப்பான இயல்புகளாகும்.

புராணங்களின் இன்றியமையாமையை நிலைநிறுத்தவே இவ்வளவும் கூறப்பெற்றது. இந்நிலையில் வைணவ புராணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி மேற்கொள்ளப் பெறுகின்றது. இந்நூல் இரண்டு பிரிவுகளாக எழுதப்பெறுகின்றது. முதல் பகுதியில் புராண இலக்கியம் பற்றிய சில செய்திகள் விளக்கம் பெறுகின்றன. இரண்டாம் பகுதியில் வைணவ புராண இலக்கியம் பற்றிச் சில செய்திகள் கூறப்பெற்று ஐந்து புராணங்கள் பற்றி விரிவான விளக்கம் தரப்பெறுகின்றது. வைணவப் பெருமக்களுக்கு சிறந்த முறையில் பயன்படும் என்று கருதியே இந்நூல் எழுதப்பெற்றது. இனி, நூலில் புகுந்து விரிவாக ஆழ்ந்து நோக்குவோம்.

3