பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. புராண இலக்கியம் - விளக்கம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் புராண இலக்கியம் பெரும் பகுதி. இது அளவாலும் மிக விரிந்தது; பொருளாலும் மிக்க ஆழமானது. பெரும்பாலும் இப்புராண இலக்கியம் வடமொழியைத் தழுவியே வளர்ந்தது. பெரும் புராணங்கள் யாவும் வடமொழியிலிருந்து தமிழாக்கம் பெற்றவை.

புராணம் - பழங்கதை, 'புராணம்' என்ற வடசொல் 'பழமை’ என்று பொருள்படும். திருவாசகத்தின் முதல் அகவல் சிவபுராணம் என்றே பெயர் பெற்றுள்ளது.

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான்[1]

என்பது மணிவாசகரின் வாக்கு. திருவாசகப் பதிகங்களுக்குக் கருத்து எழுதினோர் இத்தொடருக்கு 'சிவனது அநாதி முறையான பழமை' என்று எழுதியுள்ளனர். புராணன் - பழமையானவன்; முன்னைப் பழம் பொருட்டு முன்னைப் பழம் பொருளாயுள்ள இறைவன்.

'போற்றி போற்றி புராண காரண’ என்பது திருவாசகம் (போற்றித் திருவகவல் 224) புராண சிந்தாமணி என்பது சேந்தனார் திருவிசைப்பா. 'ஆதிபுராணன்' என்பது திருமந்திரம் (1557). 'பூரணன் காண். புண்ணியன் காண், புராணன் தன்காண்’ என்பது திருக்காளத்தி பற்றிய தேவாரத்தில் அப்பர் வாக்கு (6.8:3) 'பூமி புகலூர் மேய புராணன் போலும், பூதங்களாகிய புராணன் தானேயாகி’ என்பதும் அவர் வாக்கே. புராணன் என்ற பெயரைச் சம்பந்தர் பலமுறை குறிப்பிடுவார். 'பாசுபதம் புரிந்தளித்த புராணர் கோயில்’ (சம். தேவா. 1.131:2), 'உள்ள புண்டரிகத்துள்ளிருக்கும் புராணர் கோயில்' (மேலது 1.132:6), 'கூவினர்... சடையிற் பொலிந்த புராணனார்', (மேலது 27:1), 'அர்ச்சிக்க இருந்த புராணன்' (மேலது 2.10:1 என்பன காண்க


  1. 1 திருவா. சிவபுரா, அடி 19-20
4