பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


நாதர் என்ற பதினாறாவது சைன தீர்த்தங்கரரின் வரலாற்றைக் கூறும் ஒரு விரிந்த புராணம் போலும். இதன் பாடல்கள் சில புறத்திரட்டில் தொகுக்கப்பெற்றுள்ளன (காலம் எட்டாம் நூற்றாண்டாகலாம்). இவ்விரு நூல்களும் இன்று இல்லை.

புராணம் என்ற பெயர் கொண்டு புராணமில்லாத நூல்களும் உண்டு. எடுத்துக்காட்டாக 'அரிச்சந்திர புராணம்.' இது புராணம் அன்று மாபாரதத்தின் கிளைக் கதைகளில் இதுவும் ஒன்று. வீரன் என்ற பெயருடைய ஆசு கவிராசர் இதைக் காப்பியச் சுவைபட ஒரு சிறு காப்பியமாகப் பாடினார். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்காவியம் 'அரிச்சந்திரன் சரித்திரம்’ என்றே அச்சிடப் பெற்றிருந்தது. பின்னர் அச்சிட்டவர்கள் 'புராணம்’ என்ற பெயர் இருந்தால் மக்கள் விரும்பிப் படிப்பார்கள் என்ற எண்ணத்தால் 'அரிச்சந்திர புராணம்’ என்று பெயர் மாற்றம் செய்தார்கள் போலும். இதுபோலவே சிறு காவியமாகப் பாடப்பெற்ற கிளைக் கதைதான் நைடதம், புரூரவன் பற்றிய சரிதமாகிய 'புரூரவன் சரிதம்'. இவை மூன்றுமே (15-ஆம் நூற்றாண்டில் எழுந்தவை. (நளன் கதையைக் கூறும் நளவெண்பா 13-ஆம் நூற்றாண்டில் எழுந்தது.)

முன்பிருந்தே தமிழ் இலக்கியங்கள் கவிதையில்தான் தோன்றின.அம்மரபையொட்டி புராண இலக்கியமும் செய்யுளில்தான் செய்யப்பெற்றுவந்துள்ளது.முதல் புராணம் தொடங்கிஇந்த இருபதாம் நூற்றாண்டிலும்கூட, புராணம் என்றால் செய்யுள்தான். எனினும், புராணம் பாடிய எல்லா ஆசிரியர்களும் சந்தப் பாடல்கள் அமைப்பதிலும், சித்திரகவிகள் அமைப்பதிலும் தங்கள் திறன் முழுவதையும் காட்டியுள்ளனர். யமகம், திரிபு, மடக்கு என்பவற்றை நூல்தோறும் காணலாம். இங்கு, தோத்திரப் பாடல்களும் அதிகம் பயின்று வரக் காணலாம்.

இந்நிலையில் உரைநடையில் செய்யப்பெற்ற புராணங்களும் அண்மைக் காலத்தில் தோன்றியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டில் பல புராணங்கள் வடமொழியிலிருந்து நேரே தமிழில் உரைநடையாக மொழிபெயர்க்கப் பெற்றன. எடுத்துக்காட்டு: சிவமகாபுராணம். மணிப்பிரவாள நடை இன்னும் பழமையானது. சைனருடைய

8