பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


அநாதி காலமாக இருந்து வந்த சைவ சமயம்; இது சிவாலய வழிபாடு, திருமுறை ஒதுதல் என்ற நெறியில் சென்றது.இரண்டாவது வைணவ சமயம்; இது திருமால் வழிபாடு; நாலாயிரம் ஒதுதல், பூர்வாசாரிய வியாக்கியானங்களைப் படித்தல் என்ற நெறியில் சென்றது. இச்சமயத்தார் அனைவரும் வைஷ்ணவர்கள்ஶ்ரீ. பார்ப்பனர்கள், சாத்தின முதலிகள். இவர்களிடையே சாத்தாத முதலிகளான பார்ப்பனரல்லாதார்க்கு எந்த இடமும் இல்லை. மூன்றாவது நெறி சங்க அத்வைத நெறி. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் தோன்றி அத்வைதம் நிரூபணம் செய்த பின்னர் முன்பு சிவ வேதியராயிருந்த தமிழ்ப் பார்ப்பனர் அனைவரும் ஸ்மார்த்த அத்வைதிகளாயினர். இவர்களுக்கு ஆலய வழிபாடு முக்கியமல்ல. ஆகவே கோயில் வழிபாடு என்று பேசும்போது பார்ப்பனரல்லாத மக்கள், சைவர்கள், கோயில் வழிபாடு கொண்டவர்களாய், தல புராணம் பாடினார்கள். ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் சங்கர பாஷ்யங்களையே பற்றிக் கொண்டவர்களாய்க் கோயில் நெறியினின்றும் விலகி நின்றார்கள். ஶ்ரீ வைஷ்ணவர்களும் தங்கள் வடமொழி நூல்களையே பற்றிக்கொண்டு நாலாயிரம் தவிர வேறு வேறு தமிழ் சம்பந்தம் இல்லாதவர்களாய் வாழ்ந்தார்கள். ஆகவே தலபுராணம் செய்யும் சூழ்நிலை வந்தபோது சைவர்கள் பெருவாரியாக நூல் செய்தார்கள், பார்ப்பனர் செய்யவில்லை. ஆகவே சைவத் தலபுராணங்கள் அதிகமாகத் தோன்றின. பார்ப்பனமே ஆதிக்கம் வகித்த வைணவத்தில் தல புராணங்கள் தோன்றவில்லை. பார்ப்பனர்கள் செய்யமாட்டார்கள். செய்யவல்ல பார்ப்பனரல்லாத வைணவர் மிகக் குறைவு.

சைவத் தல புராணங்கள் மிகுதியாகவும் வைணவத் தல புராணங்கள் குறைவாகவும் இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சிவாலயங்கள் தமிழ் நாட்டில் பல்லாயிரம்; திருமால் ஆலயங்கள் இருநூற்றுக்கும் குறைவு. இலக்கிய வரலாறு முழுமையிலும் வைணவத்தில் ஒரு பத்துத் தல புராணங்கள்தானும் காண்டல் அரிது.

ஆதியில் தமிழகத்தில் இருந்தது ஒரே சமயம். ஒரே தெய்வ வழிபாடு. அதுவே சைவ சமயம், சிவ வழிபாடு. இவற்றிலிருந்து

10