பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராண இலக்கியம்-விளக்கம்


கிளைத்தனவே பிற யாவும். குறிஞ்சி தெய்வமான முருகனும், முல்லைத் தெய்வமான திருமாலும் அனைவராலும் வணங்கப் பெற்றனர். காலப்போக்கில் முருக வழிபாடு சிவ வழிபாட்டோடு ஒன்றிடவே, தனித்து நின்ற திருமால் வழிபாடு தனிச் சமயமாக ஆயிற்று. தனியே திருமால் ஆலயங்கள் தோன்றலாயின. இதுதவிர, தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த பல்வேறு சமயங்களைத் தழுவியவர்கள் அனைவருமே சைவத்திலிருந்து சென்றவர்களே. சம்பந்தர் வரலாறும் இராமாநுசர் வரலாறும் இந்த நிலையை நன்கு விளக்கும். பண்டை நாளில் பெளத்தமும்,பிற்காலத்தில் கிறித்தவமும் இஸ்லாமும், நாத்திக வாதமும் யாவும் சைவத்திலிருந்து கிளைத்தனவே. சைவத்திலிருந்து பிறமதம் புகுந்தார்களேயன்றி, பிற மதத்திலிருந்து சைவத்திற்கு வந்தார்கள் என்பதில்லை.

இதனை உணர்ந்தால் வைணவத் திருக்கோயில்கள், புராணங்கள் குறைவாக இருப்பதை உணரலாம்; உணர முடியும். அப்படியே பிறவும். சைனத்தில் புராணப் பெயரால் உள்ளவை காந்தி புராணம், மேருமந்தர புராணம், ரீபுராணம். பெளத்தத்தில் புராணம் இல்லை. கிறித்தவத்தில் தேம்பாவணியும் ஒரு புராணமே. இஸ்லாம் சமயத்தில் சீறாப்புராணமும், முகையதீன் புராணமும் புராணங்களே. இவை அடியார் வரலாறு உரைக்கும் புராணங்களாகும்.

மரபுகள்: புராணங்கள் முனிவர் மரபு, அரசர் மரபு இவற்றை விரிவாகக் கூறுவன. மக்கள் தொகை குறைவாய் இருந்த காலத்தில் வாழ்க்கைத் தேவைகள் குறைவாயும் வசதிகள் பெருகியும் இருந்த அக்காலத்தில் மக்கள் இரண்டு பண்புகளையே போற்றி ஒழுகுவர். ஒன்று அறிவு, மற்றது வீரம். அறிவை வளர்த்து அதன் எல்லை கண்டோர் முனிவர். வீரத்தை வளர்த்து அதன் எல்லை கண்டு, முனிவர் உள்ளிட்ட பிற மக்கள் கவலையின்றி வாழ உதவினோர் அரசர். எனவே, புராணங்கள் முனிவர் மரபையும் மன்னர் மரபையும் மிக நீளமாக விரித்துச் சொல்லுகின்றன. இரண்டுமே வீர வழிபாட்டின் (Hero-worship) சின்னங்கள். மக்களுடைய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் இவ்வீர வழிபாடு தேவையாய் இருந்தது. ஆகவே இந்தக் கண்கொண்டு மரபுச் செய்திகளை நாம் காண வேண்டும்.

11