பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


பேரிலக்கியங்கள் கந்த புராணம், உபதேச காண்டங்கள், திருவாதவூரடிகள் புராணம், அருணகிரிநாதர் முருகன் புகழ் பாக்கள் என்பன. இவற்றால் எழுந்த அலைகள் கரைகடந்து மோதியபோது, அம்மோதல் வைணவரையும் தாக்கியது. விழித்துக்கொண்டவர்களில் பெரும் புலவர் பலரும் தோன்றினர். இவர்கள் எக்காலத்திலும் இல்லாதவாறு வைணவச் சார்பாகப் பெரு நூல்கள் செய்தார்கள். அவை

1. பூ பாகவத புராணம் அல்லது இதிகாச பாகவதம்

2. மகாபாகவதம் அல்லது புராண பாகவதம்

3. திருக்குருகை மான்மியம்

4. கூடற்புராணம்

5. இருசமய விளக்கம்

முதல் இரண்டும் இதிகாசம் (பாகவதம்), 3-வது தல புராணம்; 5-வது சமய விசாரமாகவுள்ளது. இனி, இவை ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்வோம்.

(1) இதிகாச பாகவதம்

பகவானுடைய வரலாற்றுக் கதைகளைக் கூறுவது பாகவதம். பகவான் என்றால் வைணவத்தில் சிறப்பாய்க் குறிப்பது கண்ணபிரானை. வியாசர் செய்ததாய் வழங்கும் வடமொழிப் பதினெண் புராணங்களில் திருமால் புகழ்கூறும் புராணங்கள் பாகவதம், விஷ்ணு புராணம், நாரதீயம், காருடம் என்னும் நான்கு இவற்றுள் முதலாவது பாகவதம். வடமொழியில் கண்ணபிரான் கதைகளைக் கூறும் பாகவத புராணம் ஏழு - இதிகாசம், புராணம், சங்கிதை, உபசங்கிதை, விஷ்ணு ரகசியம், விஷ்னுயாமனம், கெளதம சங்கிதை என்றும், அவற்றுள் முதல் இரண்டுமே தமிழில் செய்யப் பெற்றன என்றும் ஆன்றோர் கூறுவர். இதிகாச பாகவதம் வடமொழியில் 18,000 சுலோகங்களில் வியாசரால் செய்யப்பெற்றது.

18