பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இதிகாச பாகவதம்


தமிழில் செவ்வைச் சூடுவார் செய்த பாகவத புராணம் இந்த இதிகாச பாகவதத்தின் மொழிபெயர்ப்பாகும். இதுவும் மூலத்தைப் போலவே ஸ்கந்தம் 12 கந்த (ஸ்கந்த)ப் பாகுபாட்டைக் கொண்டது. பாயிரம் பின் மொத்த அத்தியாயங்கள் 155, பாடல் தொகை 4973, இந்நூல் பாகவத புராணம், இதிகாச பாகவதம், விண்டு பாகவதம் என்ற பெயர்களாலும் வழங்கும். நூல் முகப்பில் உள்ள கடவுள் வாழ்த்துப் பகுதி ஐந்தே பாடல்களைக் கொண்டது. முதலாவதான ’திருமால் வணக்கம்’ எண் இடாமல் தனிக்காப்புச் செய்யுளாகவே ஏட்டுப்படியில் உள்ளது. பின்னர் தொடர்வன சக முனிவர் வணக்கம், நூற்பெருமை, கலைமகள் வணக்கம், அவையடக்கம் என்பனவாகும். “இந்நூல் முழுவதும் கலைமகள் என் நாவிலிருந்து பாடிய காரணத்தால், அத்தேவியைப் போற்றி நான் ஒருதுதி சொன்னாலும் அஃது அவளே தன்னைப் பாடிக்கொண்டதாக முடியும்”[1] என்கின்றார்.

பூம டந்தை புணர்ந்தவன் மாக்கதை
நாம டந்தை நவின்றன ளாகலான்,
காம டந்தையென் றோர்கவி யான்சொலின்
பாம டந்தைதற் பாடிய தாகுமே

என்பது பாடல்.

நூற்பாகுபாட்டைத் தொகுத்துக் கூறும் பகுதியாகிய பதிகம் என்பது அடுத்து இருத்தற்குரியது. இஃது இந்நூலின் இறுதியில் உள்ளது. இதை இவர் பாயிரம் உரைத்தது என்று 33 பாடல்களுடைய தனி அத்தியாயமாக்கி அதன்பின் ’புராண அளவை உரைத்த அத்தியாயம்’ என்ற தலைப்பில் புராணங்கள் 18 என்றும் அவற்றின் சங்கியை இன்னதென்றும் கூறி,


  1. நம்மாழ்வாரும்,
    என்சொல்லால் யான்சொன்ன
    இன்கவி என்பித்துத்
    தன்சொல்லால் தான்தன்னைக்
    கீர்த்தித்த மாயன் (திருவாய் 7.9.2)
    என்று கூறியுள்ளதை ஈண்டு நினைத்தல் தகும்.

19