பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இதிகாச பாகவதம்


யதுகிரி[1] கோகன்னம் ஆகிய தலங்களும் நதிகளும் குறிப்பிடப் பெறுகின்றன. குசேலருக்கு அருள் புரிகின்றான்.இருபது பாடல்களில் மிகச் சுருக்கமாக குசேலருடைய பக்திப்பெருக்கு காட்டப் பெற்றுள்ளது.[2] குசேலன் நம்மைப்போல் செல்வ நாட்டம் உடையவன் அல்லன். இல்லக்கிழத்தி ஏவக் கண்ணனை நாடி வந்தான் எனக் கருதிய கண்ணன் அவன் அன்புடன் கொணர்ந்த 'அவலை' எடுத்து வாயில் இட்டுக் கொள்கின்றான். ஒருமுறை எடுத்தவுடன் குசேலரின் இல்லத்தில் இந்திரச் செல்வம் நிறைகின்றது; இரண்டாம் முறை எடுக்கும்போது உருக்குமினணி தடுத்து விடுகின்றார். கையில் செல்வம் எதுவும் தராமையால், 'பொருள் கொடுப்பின் இவன் தன்னை மறந்துவிடுவதற்கு ஏதுவாகுமென்று கண்ணன் தரவில்லை போலும் என்று குசேலன் கருதி அமைதியுடன் வெறுங்கையுடன் திரும்புகின்றான்.

அம்ம உய்ந்தனம் உய்ந்தனம்
அரும்பொருள் எய்தின்
மம்மர் கூர்தர மறக்குவன்
நமையென மதித்தே
மும்மை சாலுல களித்தருள்
முளரியஞ் செங்கட்
செம்மல் நல்கலன் செல்வமென்
றுவந்தனன் சென்றான்

என்ற பாடல் இதனைக் காட்டுகின்றது.

சமந்த பஞ்சகம் செல்லல், இறந்த குழந்தைகளை மீட்டல், சுபத்திரையை அர்ச்சுனன் மணத்தல், சனந்தனர் சனகாதி முனிவர்க்குச் சுருதி கீதையுரைத்தல் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.


  1. 9. யதுகிரி - திருநாராயணபுரம். இதுபற்றிய பாடல் (4102) ஏட்டில் இல்லை என்பது பதிப்பாளர் குறிப்பு.
  2. 10 இந்த இருபது பாடல்களே பின்னால் 'குசேலாபாக்கியானம்' பாடுவதற்கு கைகொடுத்து உதவியுள்ளன.

31

4