பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுப்பு - ஆகியவை அடக்கம். மார்க்கண்டேயர் தவம் செய்து திருமாலை வேண்ட சிவபிரான் தோன்றி மாயனும் நாமும் வேறல்ல என்று வரங்கொடுக்கிறார். பின் சூரிய துதி வருகிறது. இறுதியில் தொடக்கத்தில் சொல்லியவாறு பாயிரம் உரைத்தது என்னும் பதிகப் பகுதியும் புராணங்களின் அளவும் கூறப்பெறுகின்றன. நூலின் இறுதிப் பாடலில் ஆசிரியர்நூல் கற்போருக்கு வாழ்த்து கூறுகின்றார்.

கனைத்துவண் டிமிர்துழாய்க்
கண்ணன் மாக்கதை
மனத்துற வழங்குநர்
மகிழ்ந்து கேட்குநர்
வினைத்திருக் கற்றுறு
மெய்ம்மை யாதியா
நினைத்தன பெற்றிவண்
நீடு வாழியே.

என்பது காண்க

செவ்வைச் சூடுவார் சிறந்த பக்தியோடும் புலமையோடும் புராணத்தை நடத்திக்கொண்டு செல்கிறார். அலங்காரங்களிலோ வருணனைகளிலோ, காவியச் சுவை வேண்டும் என்பதிலோ இவர் தம் கருத்தைச் செலுத்தவில்லை. இவர் கூறும் கதைகளும் வரலாற்று முறையில் இல்லை. ஆங்காங்கு முனிவர்கள் வினாவ, சூதர் சொல்லுவதாகக் கதைகளை அமைத்துள்ளார். அவதாரங்கள் வைப்பு முறையைப் பார்த்தால் இது விளங்கும். முதல் அவதாரமாகிய மச்சாவதாரம் இறுதியில் வருகிறது. பிற யாவுமே இதற்கு முன்னர் சொல்லப் பெறுகின்றன.

திருமால் பக்தி இவரிடம் அழகாக விரிந்த சமயப் பொது நோக்காக அமைந்துள்ளது. நெறியாக அமையவில்லை.இந்த இயல்பை நூல் முழுதும் காணலாம். மோகினியுரு எடுத்த கதை இத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் தக்க யாகத்தின் அழிவு கூறிய இடத்தில் சிவ பரம்பொருள் என்ற தன்மைக்கு மாறுபடாமல் பாடுகிறார். பின்வரும் இரு பாடல்களிலும் காணத்தக்கது.

33