பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ புராணங்கள்

விரிசினை யால நீழல்
மெய்த்தவச் சனக னாதி
அருமறைக் கிழவர் சூழ
அமர்ந்தவா னந்த ரூபத்
தொருமுத லவனைக் காணா
உவந்தனர் அமரர் தாழ்ந்தார்
மரைமலர்ப் பொருட்டு வாழும்
மறையவன் வழுத்தி னானால்,

ஆவயி னாரன் மீனோர்
அறுவர்வத் தன்பு முற்றித்
தீவிய முலைப்பா லூட்டத்
திருமுகம் ஆறு கொண்டு
மேவிய மடவார் கொம்மை
வெம்முலை யொருங்கு மாந்தி
மூவிரு முகனென் றெல்லா
உலகமும் மொழிய நின்றான்.

மார்க்கண்டேயன் தவம் உரைத்த இடத்தும் சிவபிரான் தமக்கும் மாயனுக்கும் வேறுபாடு இல்லை என்று கூறுவதாக இவர் பாடுவதும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

காலம்: 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் (1500-1525)

(2) புராண பாகவதம்

ஆசிரியர்: நெல்லி நகர் அருளாளதாசர். இவர் நெல்லி நகர்க்கதிபதி. இவர்தம் இயற்பெயர் வரதன்; வரதராச ஐயங்கார் எனவும் வழங்கும். குணச்சிறப்பினாலும் அருளாளதாசர் என வழங்கப் பெற்றார். அளவாற் பெரிய பாகவத புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தவர். இந்நூல் 9147 பாடல்களைக் கொண்டது.

34