பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


தோற்றமும் கூறுகிறது. இது 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிறப்புடைய எல்லாப் புராணங்கட்கும் பொருந்தும் ஒரு பொது இயல்பு. பெரிய அளவிலான சிவபுராணங்கள் அனைத்திலும் இவ்வியல்பைக் காணலாம். அப்படியே 'கலியுக தர்மம்' என்று எல்லாப் புராணங்களுக்கும் ஒரு படலம் சொல்லும். அதை இவர் காஞ்சிப் படலத்தில் சில பாடல்களால் சொல்லுகிறார். திருமால் வரலாற்றில் போர்ச் செய்திகள் மிகவும் அதிகம். அவற்றையெல்லாம் இவர் வருணிக்கும்போது பெருங்காப்பிய இலக்கணம் பொருந்த விரித்துச் சொல்வது ஆங்காங்கு சிறப்பாகவே உள்ளது. அப்படியே ஒரிடத்தில் இவர் வேட்டையை வருணிப்பதும், போர்த்தன்மை பொருந்தவே அமைந்துள்ளது.

'கயிலாச யாத்திரை’ என்ற படலத்தில் திருமாலின் துவாதச நாமங்களும் விரிவாகச் சொல்லப்படுகின்றன. குருகுல மரபே பாரதச் சரித்திரம். இம்மரபு, இந்நூலில் மிகவும் விரித்துப் பாடப் பெற்றுள்ளது (539 பாடல்கள்). சந்தப் பாடல்கள் சொல்லப் பெற்ற இடமெல்லாம் இந்நூலாசிரியருக்கு எளிதாக வந்து ஏவல் கேட்கின்றன. நம என்று பாடித்துதிப்பதில் இவருக்குப் பெருவிருப்பம் முடிந்த இடமெல்லாம்.இது சொல்லப் பெறும். திருமாலைச் சென்று துயிலெழுப்பிய பிறகு தேவர்கள் துதிக்கின்றனர். 12 பாடல்கள் திருமாலின் பன்னிரு பெயர்களையும்"[1] சொல்லித் துதிப்பன.

ஈச நேமிய எம்பர னே, அலை
வீசு பாற்கடல் மேவிய வித்தக
மாசி லாமலர் மங்கைதன் நாயக
கேச வாகெரு டக்கொடி யாய்நம.

கண்ணன் மண் தின்றான் என்று கோபித்து யசோதை வாயைத் திறக்குமாறு சொல்ல, அவன் வாயைத் திறந்தபோது அவ்வாயினுள்ளே யசோதை காண்கின்றாள்:

பிரமனைக் கண்டாள் அண்ட
கோளத்தின் பெருமை கண்டாள்


  1. 16 நம்மாழ்வார் திருவாய் மொழி 27 ஒப்பிடலாம். (பன்னிரு திருநாமப்பாட்டு)

46