பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




பையரவில் நடித்திடுவான் தேவி யான
பங்கயமேற் பகங்கிளியே ஆடீரூசல்

என இவற்றில் ஒரு பாடல். திருமணம் முடிந்தபிறகு கண்ணனும் உருக்குமிணியும் ஊசலில் அமர்கிறார்கள். அந்த இடத்தில் கவிஞர் எட்டுப் பாடல்கள் கொண்ட ஒர் ஊசல் பிரபந்தமே பாடிவிடுகின்றார்.

நீலமணி யொடுமாலின் மணியு மாட
நித்திலத்தா மமுமாட நிறைந்த பூவின்
மாலைகளும் அசைந்தாட வண்டும் ஆட
மருங்கெழில்மே கலையாடக் குழையும் ஆட
வேல்களெனும் விழிகுழையோ டாடக் காதின்
விளங்குதிருக் குண்டலமும் தோடும் ஆட
ஆலினமர் பழம்பொருளே ஆடீ ரூசல்
அழகுசெறி உருக்குமினி ஆடீ ரூசல்

என்பது அவற்றில் ஒரு பாடல். அடுத்த ஏழு பாடல்களில் ஊசலாடினார்கள் என்றே சொல்லி மகிழ்கின்றார். பின்னும் சத்தியபாமை திருமணம் முதலான இடங்களிலும் ஊசலாடினார்கள் என்றே இயம்பிக் கொண்டேகுகின்றார்.

பள்ளியெழுச்சியும் இதுபோல, பாற்கடலில் பள்ளிகொண்டு யோகத்துயில் புரியும் பரந்தாமனை இந்திரனை முன்னிட்ட தேவர்கள் சென்று வணங்கித் துயிலெழுப்புகின்றனர். இவ்விடத்தில் ஆசிரியர் பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பள்ளி எழுச்சிப் பிரபந்தமே பாடியுள்ளார். இங்கு கூர்மம், ஆதிமூலம், மீனம், வராகம், நரசிங்கம், வாமனன், இராமன், கண்ணன் ஆகிய அவதாரங்களை முறையாகப் பாடுகின்றார். பல இடங்களிலும் இவர் கூறும் குறிப்பால், கசேந்திரனுக்கு அருள் செய்து வந்த ஆதிமூலத் தோற்றத்தையும் ஓர் அவதாரமாகவே கருதினார் என்று தெரிகின்றது.

வெற்பினைக் கடைமத்தென
வேலையுள் நிறுவிச்
சற்ப்பவண் கயிறாகிடக்
கடைந்தமிர் தத்தை

58