பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


அரிவைதன் னுடனே தீயை
வலம்வர அம்மி மீதின்
கருவமர் குழலி காலால்
மிதிக்கவான் வடமீன் கண்டார்.

என்பது. சில இடங்களில் பாடலின் முடிவில் பலசுருதியும் சொல்லப் பெறுகின்றது.

பாகவத புராணம் கண்ணன் வரலாற்றைக் கூறும் முகத்தால் திருமால் பரத்துவத்தைக் கூற எழுந்தது. ஆதலால் சிவபெருமானும் திருமாலைத் துதித்தலைக் கூறுவது இயல்பாக அமைகின்றது. இந்த இயல்பைப் பல இடங்களிலும் காணலாம். சிவபெருமான் தம்முன் தோன்றிய அரியைப் பன்னிரு நாமமும் நவிற்றித் துதித்தலை,

கேசவ நமவே நாரண நமவே
கிளரொளி மாதவ நமவே
மாசறு சுடர்கோ வித்தனே நமவே
வண்மைசேர் விண்டுவே நமவே
ஏசற உயர்ந்த எழிலுறு மதுசூ-
தனநம இடரினை யகற்றும்
தேசுறு திரிவிக் கிரமனே நமவே
சிறந்திடு வாமனா நமவே.

என்ற பாடலில் காணலாம். பல இடங்களிலும் சிவபெருமானைக் குறிப்பிடும்போது முறையாக ஆகுவாகனன், தோகை மாமயிற் சண்முகன், கணங்கள் முதலியன தவறாது குறிப்பிடப் பெறுகின்றன. பின்னர் பஸ்மாசுரன் என்னும் வருகாசுரனுக்குப் பரமேசுவரன், "நீ யார் தலையில் கை வைத்தாலும் அவர் அழிவர்” என்று வரங் கொடுக்கவும், அவன் அவர் தலையிலேயே கை வைக்கப் பார்க்கின்றான். அவர் ஒடவும், திருமால் அங்கு தோன்றி அவன் தன் தலையிலேயே கைவைத்து அழியும்படிச் செய்து, “மருளனாகிய அசுரனுக்கு இவ்வரம் அருளலே அவம்” என்று அறிவுறுத்துகின்றார்.

'அம்பிகாவனப் படல'த்தில் அம்பிகையை நந்தகோபன் முதலான யாதவர் சென்று வழிபடுவதைக் குறிப்பிடும்போது,

60